உடன்படிக்கையில் உண்மையுள்ளவர்!

"ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்... நீ அறியக்கடவாய்" (உபா. 7:9,10).

நம் தேவன் உடன்படிக்கையில் உண்மையுள்ளவர். உடன்படிக்கை என்பது, இரு நபர்களுக்கிடையே ஒரு காரியத்தைக் குறித்து செய்யப்படும் தீர்மானமாகும். பண்டைய காலங்களில், ஒருவருக்கொருவர் பல காரியங்களைக் குறித்து உடன்படிக்கை செய்துகொள்ளுவார்கள். அது இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையே, இரண்டு நிறுவன அதிபர்களுக்கிடையே ஏற்படும் உடன்படிக்கையாக இருக்கலாம்.

ஆப்பிரிக்காவின் மாபெரும் நற்செய்தி ஊழியரான டாக்டர். டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர், ஆப்பிரிக்க பழங்குடியினர் இரத்தத்தினால் செய்த உடன்படிக்கையைப் பற்றி, தம்முடைய பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார். அவரும் நற்செய்திப் பணியின்போது, பல உடன்படிக்கைகளை செய்திருக்கிறார். வழக்கமாக, பழங்குடி மக்களின் தலைவர்கள் தங்கள் மணிக்கட்டைக் கீறி, அதிலிருந்து வழியும் இரத்தத்தை பானங்களுடன் கலந்து பரிமாறுவார்கள். இதனால் ஏற்படும் காயம், அந்த உடன்படிக்கையின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்பதும், தங்கள் தலைமுறை தலைமுறைக்கும் அது நிலைத்து நிற்கும் என்பதும், அவர்களது நம்பிக்கை. உடன்படிக்கையைப் பாதுகாக்க, தங்கள் உயிரையும் பணயம் வைப்பார்கள்.

திருமண உடன்படிக்கையில், இரண்டு வெவ்வேறு நபர்கள் தங்களுக்குரிய உரிமைகளை தியாகம் செய்து, ஒன்றிணைந்து குடும்பத்தை கட்டியெழுப்ப முனைகிறார்கள். திருமணத்தின் நோக்கம், இரு நபர்களுக்கிடையே முழுமையான உண்மை காணப்படவேண்டும் என்பதே. "உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்" என்று, ஓசியா 2:20 சொல்லுகிறது. ஆனால், அநேகம்பேர் தாங்கள் கொடுக்கும் உடன்படிக்கையின்படி உண்மையாயிருப்பதில்லை.

ஆனால் நீங்கள் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் தான் செய்த உடன்படிக்கையில் முழுவதும் உண்மையுள்ளவராயிருப்பதை அறிந்து கொள்ளலாம். கிறிஸ்து உங்களோடு ஒரு உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். அது, இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலான உடன்படிக்கையாகும். "இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்" (1 கொரி. 11:24,25). இது கிறிஸ்துவினாலான உங்கள் மாம்சத்தோடும், இரத்தத்தோடுமுள்ள உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதம், உங்களுக்கு ஆவிக்குரிய பிரகாரமாகவும், சரீரப்பிரகாரமாகவும் உண்டாகிறது. "அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபே. 1:3). தேவபிள்ளைகளே, தம்முடைய இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையின் மூலம், உங்களுக்கு சுதந்தரமாக வருகிறதான ஒவ்வொரு ஆசீர்வாதங்களையும் நிறைவேற்ற கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" (சங். 16:5)