உண்மையின் தன்மை!

"கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது" (சங். 33:4).

கர்த்தர் தம் வார்த்தைகளிலும், உங்களைக் குறித்த நினைவுகளின் செயல்களிலும் சத்தியமுள்ளவர். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களுக்கு நன்மை செய்யும்படியாகவே உண்மையுள்ள வராயிருக்கிறார்.

ஒரு தாயார், தன் மகள் ஆறு வயதாக இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் சில புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைப் படிக்கும்படியாகவும், அப்படிப் படித்து முடித்தால், நூலகத்திலிருந்து ஒரு விசேஷப் பரிசை அனுப்பி வைப்பார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். மகள் அப்படியே செய்தபோது, அந்நூலகத்திலிருந்து அவளுக்கு பிடித்தமான பொம்மை ஒன்று, அவளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. "தனக்கு பிடித்தமான பொம்மையைத் தர, ஒரு நூலகருக்கு எப்படி முடியும்" என்று, அவளால் நம்பவே முடியவில்லை.

ஆனால், அதை அனுப்பியது அவள் தாயார் தான் என்பது, அவளுக்கு தெரியாதிருந்தது. அதுபோலத்தான் உங்களுக்கு எது தேவை, எப்பொழுது தேவை, உங்கள் இருதயத்தின் வாஞ்சை என்ன என்பதெல்லாம், கர்த்தருக்குத் தெரியும்.

முதலாவது, கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்தவர். சங்கீதக்காரன், "நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்" (சங். 139:3) என்று சொல்லுகிறார். கர்த்தர் உங்களுடைய வழிகள், விருப்பங்கள், வாஞ்சைகள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆகவே, உங்களுடைய எல்லாப் பிரச்சனைகளையும் அவர் மாற்ற வல்லமையுள்ளவர்.

இரண்டாவது, தேவன் சர்வ வியாபியாக, அதாவது எப்போதும் உங்களோடிருப்பவராக இருக்கிறார். அவர் சதா காலங்களிலும் உங்களோடிருக்கிறவர். உங்கள் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்திருக்கிறவர். நீங்கள் உலகத்திலுள்ள அநித்தியமான காரியங்களிலே, உங்கள் நம்பிக்கையை வைக்காமல், முழு நம்பிக்கையையும் கர்த்தர் மேல் வைப்பீர்களென்றால், கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு அநுகூலமான துணையுமாயிருப்பார் (சங். 46:1).

மூன்றாவது, கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். யோபு, "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2) என்றார். ஆம், கர்த்தர் செய்ய நினைத்த காரியம் நிச்சயமாகவே தடைபடாது. அதை எந்த மனிதனாலும் தடைபண்ணவே முடியாது. ஆகவே, உங்களுடைய பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்கு கடன்பிரச்சனை இருக்கலாம்; எந்த காரியத்திலும் நீங்கள் தோல்வியை சந்திக்கலாம். ஆனாலும் ஜெயகிறிஸ்து உங்களோடு கூட இருக்கிறார். கர்த்தர் உங்களுடைய கடன்பிரச்சனையை நீக்கவும், தோல்வியை உங்களுக்கு ஜெயமாக மாற்றித்தரவும் வல்லமையுள்ளவர்.

நான்காவது, கர்த்தர் தம்முடைய வழிகளிலெல்லாம் உண்மையுள்ளவர். அவர் "பொய்யுரையாத தேவன்" (தீத்து 1:3). அவர் சொன்னதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தேவபிள்ளைகளே, உங்களுடைய கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்துவிடுங்கள். கர்த்தர் அவற்றையெல்லாம் மாற்றி, உங்களை ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்’ (சங். 36:7).