கூப்பிடுகிறவர்களுக்கு உண்மையுள்ளவர்!

"தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்" (சங். 145:18).

கர்த்தர் உண்மையுள்ளவர். "தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு சமீப மாயிருப்பேன்" என்று வாக்களித்த அவர், உண்மையுள்ளவர். நீங்கள் உண்மையாய் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் உங்கள் அருகிலே வந்து, அன்போடு விசாரிப்பார்; தேவைகளையெல்லாம் சந்திப்பார்.

"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்கு சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?" (உபா. 4:7) என்று மோசே கேட்கிறார். தேவன் உங்களுக்கு சமீபமாயிருக்கிறதே, உங்களுக்கு பெரிய மேன்மையாகும். அவரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட நீங்கள் அவரைத் தொழுது கொள்ளும்போது, அவர் உங்களுக்கு சமீபமாய் வந்து, உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார்.

"இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்" (மத். 18:20) என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். இரண்டு, அல்லது மூன்று பேர் கூடி தேவனை ஆராதிக்கும்போது, அவர் சமீபமாய் கடந்து வருவார். அங்கே அவர்கள் மத்தியிலே கர்த்தருடைய பிரசன்னத்தை நிச்சயமாகவே உணரமுடியும். ஏனென்றால், கர்த்தர் உண்மையுள்ளவர்.

"அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே" (அப். 17:27). எவ்வளவு ஏழையோ, அல்லது செல்வந்தனோ, படித்தவனோ, படிப்பறிவில்லாதவனோ யாராயிருந்தாலும், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் சமீபமாயிருக்கிறார். ஒருவேளை, நீங்கள் அவருக்கு தூரமானவனாக, அந்நியனாக எண்ணிக் கொண்டிருக்கலாம். உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, நீங்கள் எந்த நிலைமையிலிருந்தாலும் அவர் உங்களுக்கு சமீபமாய் கடந்து வருவது நிச்சயம்.

"கர்த்தர் பெரிய பெரிய ஊழியக்காரர்களுக்குத்தான் சமீபமானவர்; அவர் களுடைய ஜெபத்தைத் தான் கேட்பார்; அவர்களுக்குத்தான் பதிலளிப்பார்" என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் கர்த்தர் பட்சபாதமுள்ளவரல்ல. ஊழியர்களோடு இருப்பதுபோலத் தான் விசுவாசிகளோடும், படித்தவர்களோடு இருப்பதுபோலத் தான் படிக்காதவர்களோடும் இருக்கிறார்.

ஒரு ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: "தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று உண்மையாக் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, அவர் சமீபமாய் வந்து, அவனை நீதிமானாக்கவில்லையா? (லூக். 18:13,14).

யாபேஸ் துக்கமுகமுடையவனாயிருந்து, "தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்" (1 நாளா. 4:10) என்று ஜெபித்தபோது, கர்த்தர் சமீபமாய் வந்து அவனை ஆசீர்வதிக்கவில்லையா? தேவ பிள்ளைகளே, உங்கள் ஜெபத்தையும் கர்த்தர் கேட்டு, தீங்கு உங்களை துக்கப்படுத்தாதபடிக்கு பாதுகாத்து ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு சமீபமாயிருக்கிறார்.

நினைவிற்கு:- "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" (சங். 34:18).