செவ்வாய்திட்டங்களில் உண்மையுள்ளவர்!

"கர்த்தாவே, நீரே என் தேவன். உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்" (ஏசா. 25:1).

ஏசாயா தீர்க்கதரிசி, "நான் உம்முடைய நாமத்தை உயர்த்தி துதிப்பேன். நீர் அதிசயமானவைகளை செய்தீர். உம்முடைய பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்" என்று சொல்லி, தேவனை துதிக்கிறார். இதோ, சங்கீதக்காரனும், "என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது" (சங். 139:16) என்று சொல்லுகிறார்.

நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்னமே, கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கங்களையும், திட்டங்களையும் அறிந்திருக்கிறார். "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரே. 29:11) என்றும்; "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல. பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது" (ஏசா. 55:8,9) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.

உங்களுடைய நினைவுகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய நினைவுகள் மிகவும் உயர்ந்ததாயிருக்கிறது. அவரது திட்டங்களும், நினைவுகளும் வாக்குத்தத்தங்கள் மூலமாக வெளிப்படுகின்றன. நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும், ஜெயங்கொள்ள வேண்டும் (ரோம. 8:37), சுகமாய் வாழ வேண்டும் (3 யோவா. 2), வியாதியில்லாமலிருக்க வேண்டும் (ஏசா. 53:5) மற்றும் கடனில்லாமல் வாழ வேண்டும் (உபா. 15:6) என்பதே, கர்த்தருடைய நோக்கமாயிருக்கிறது.

உங்களுடைய வாழ்க்கை கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. அவர் உங்களை தம்முடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார். "இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது" (ஏசா. 49:16) என்று கர்த்தர் உரைக்கிறார். ஆகவே தேவ பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கை உங்களுடைய கைகளிலோ, ஜோசியரிடத்திலோ அல்ல; நீங்கள், ஆணிபாய்ந்த இயேசுவின் உள்ளங்கைகளில் வரையப்பட்டிருக்கிறீர்கள்.

அவர் தம்முடைய உள்ளங்கையை ஒவ்வொருமுறை நோக்கும்போதும், உங்களை நினைவுகூருகிறார். உங்களைப் பற்றிய திட்டங்கள் யாவும், பரலோகத்திலுள்ள புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. உங்களைக் குறித்த அவருடைய எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றும்படி, அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

தேவபிள்ளைகளே இயேசுவானவர் கற்றுத் தந்தது போலவே, "கர்த்தாவே உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போலப், பூமியிலேயும் செய்யப்படுவதாக" (மத். 6:10) என்று ஜெபித்து, உங்களை அவரது திட்டங்களுக்கும், நோக்கங்களுக்கும் அர்ப்பணியுங்கள். ஏனெனில், "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்திருக்கிறார்" (பிர. 3:11).

நினைவிற்கு:- "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங். 32:8)