மன்னித்து சுத்திகரிப்பதில் உண்மையுள்ளவர்!

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவா. 1:9).

நம் தேவன் மன்னிப்பதில் உண்மையுள்ளவர். மன்னிப்பதற்கு தயவு பெருத்தவர். மன்னிப்பதற்காகவே இரத்தம் சிந்தினவர். மன்னிப்பதற்காகவே நியாயப்பிரமாணத்தின்படி, நித்தியமான பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்தவர்.

"மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்" (ரோம. 8:3,4). இயேசுகிறிஸ்து இரட்சிப்பின் வழியை ஏற்படுத்தியது மாத்திரமல்ல, பரிசுத்தத்திற்கான வழியையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

அநேகர், பாவம் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் வாழுகிறார்கள். பாவம் எவ்வளவு கொடூரமானது! வேதம் சொல்லுகிறது: "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதி. 28:13). நீங்கள் உங்கள் பாவங்களை உண்மையாய் அறிக்கையிட்டு விட்டுவிடும்போது, கர்த்தருடைய இரக்கத்தை பெற்றுக்கொள்ளுவீர்கள். அப். யோவானும், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவா. 1:9) என்கிறார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் பாவங்களை மன்னித்தபிறகு, அதை அவர் திரும்ப நினைப்பதில்லை. ஆகவே, நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் வரும்போது, தைரியமாய் கர்த்தரோடு பேசுங்கள். "ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" என்று, எபி. 4:16-ல் வாசிக்கிறோம்.

சகோதரி. கேத்ரின் குல்மேன் அவர்கள், தன் பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக் கொண்ட பிறகும், குற்ற மனச்சாட்சி அவர்களை வாதித்துக்கொண்டேயிருந்தபடியால், மீண்டும் கர்த்தரிடத்தில் மன்னிப்புக் கேட்டு ஜெபித்தார்கள். கர்த்தர் மிகவும் அன்புடன், "கேத்ரின், நீ முதல்முறை மன்னிப்பு கேட்டபோதே, உன் பாவங்களை மன்னித்து அவைகளை கடலின் ஆழத்திலே போட்டுவிட்டேன். நீ இன்னமும் அதை நினைத்துக்கொண்டிராமல் மறந்துவிடு. வாழ்க்கையில் முன்னேறு" என்று சொன்னார். அதன் பிறகு, அவர்களுடைய குற்ற மனச்சாட்சி நீங்கினது. வல்லமையான சுகமளிக்கும் சுவிசேஷகியாக விளங்கினார்கள்.

"அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" (மீகா.7:18,19). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள்மேல் வைத்த அன்பினால் தயவாக உங்கள் பாவங்களை மன்னித்து, கடலின் ஆழத்தில் போட்டுவிட்டார். ஆகவே, அதையே நினைத்துக் கொண்டிராதிருங்கள். உங்களை பரிசுத்தமாய்ப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" (1 யோவா. 2:2).