சோதனையில் உண்மையுள்ளவர்!

"மனுஷனுக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்" (1 கொரி. 10:13).

நம் தேவன், நீங்கள் ஆவிக்குரியபடி வளர்ந்து முடிவில் தன்னைப் போல மாற வேண்டும், அவருடைய குணாதிசயங்களை உடைவர்களாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். "தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்" (ரோம. 8:29). நீங்கள் சோதனையில் வெற்றி பெற்று பூரணத்தை அடையும்வரை, எல்லாவிதத்திலும் உங்களுக்கு உதவி செய்ய அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

சிலர், தாங்கக்கூடாத அளவுக்கு கர்த்தர் தன்னை சோதிப்பதாக சொல்லுவார்கள். கர்த்தர் உங்களை சோதிப்பதில்லை. நீங்கள் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லுவதற்காகவும், சோதனையை நீங்கள் ஜெயிக்க வேண்டுமென்பதற்காகவும் தான், அதை அனுமதிக்கிறார். "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிற வரல்ல; ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல" (யாக். 1:13).

வேதம் சொல்லுகிறது: "கர்த்தராலே மனுஷனுடைய நடைகள் வாய்க்கும்" (நீதி. 20:24). நீங்கள் தீமை எதுவென்றும், நன்மை எதுவென்றும் அறிந்துகொள்ளும்படி, கர்த்தர் தம்முடைய வசனத்தினாலே உங்களை பழக்குவிக்கிறார்.

ஒரு சகோதரியின் வீட்டின் அறைகளிலே, குளிர்காலங்களில் சூடாக்கும் கருவிகளை பயன்படுத்துவார்கள். அவர்களுடைய இரண்டு வயது மகன் சிவப்பு நிற அனலைத் தரும் அந்தக் கருவியை பார்த்ததும், மிகுந்த ஆர்வம் கொண்டு அந்த சிவப்பு நிற நெருப்பைத் தொட முயற்சிப்பான். தன் கையை சுட்டுக்கொள்வானோ, என்று அவர்கள் பயப்படுவார்கள். ஆகவே, அதை தொடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவனுக்கு விளக்கினார்கள்.

ஆனாலும் அவன் அதைத் தொடாமலிருப்பானா, என்று சோதித்து பார்க்க முயன்றார்கள். கருவியை இயக்கிவிட்டு, மறைந்து நின்று அவனைக் கவனித்தார்கள். அவன் அந்த கருவியின் அருகிலே சென்று, அந்த அனலை உற்றுப் பார்த்து விட்டு, "இல்லை இல்லை" என்று சொல்லி, ஓடிவந்து விட்டான். அவர்கள் கொடுத்த பயிற்சி பயனளித்ததால், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள். இப்படியே கர்த்தரும், நீங்கள் சோதனைகளுக்கு விலகியோடும்படி விரும்புகிறார்.

வேதம் சொல்லுகிறது: "நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" (எபி. 4:15). நம்மைப்போலவே, எல்லா சோதனைகளும் அவரையும் தாக்கிற்று; ஆனாலும் அவர் பாவமில்லாதவராயிருந்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கு பாவ சோதனைகள் வரும்போது, கர்த்தர் தமக்கு வந்த சோதனைகளை நினைவுகூருகிறார். உங்களுடைய கால்கள் சறுக்கி விடுமோ என்று நீங்கள் அங்கலாக்கிற வேளைகளில், துரிதமாய் ஓடிவந்து தமது கிருபையினால் உங்களைத் தாங்குகிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு, அவர் ஒருநாளும் இடங்கொடுப்பதில்லை. அவர் கடைசிவரை உங்களை நிலைநிறுத்திப் பாதுகாப்பார்.

நினைவிற்கு:- "ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்" (எபி. 2:18).