சுடர்கள்!

"ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது என்றார்" (ஆதி. 1:14).

தேவன், நான்காம் நாள் ஆகாய விரிவிலே சுடர்களை சிருஷ்டித்தார். வெறுமை யான ஆகாய விரிவு, சிருஷ்டி கர்த்தரின் கரத்தினால் அழகாக அலங்கரிக்கப்பட்டது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் ஆகாய விரிவை அழகு செய்தன.

"தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்" (ஆதி. 1:16). சிறியதும் பெரியதுமான நட்சத்திரங்களையும், பால் போன்ற குளிர்ந்த ஒளியை வழங்கும் சந்திரனையும், சகல ஜீவ ராசிகளுக்கும் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தரும் சூரியனையும் கர்த்தர் எவ்வளவு ஞானமாக சிருஷ்டித்தார்! அந்த தேவனை, நன்றியால் நிறைந்து துதித்து போற்றாமல் இருப்பது எப்படி?

தாவீது ராஜா துதித்தலுடனே, "பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங் கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத் திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது" (சங். 136:7,8,9) என்று கூறுகிறார்.

பூமியிலே நீங்கள் சுடர்களைப் போலத்தான் இருக்கிறீர்கள். அப்.பவுல், "உலகத் திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்" (பிலி. 2:14) என்று குறிப்பிடுகிறார். தேவபிள்ளைகளே, இருண்ட உலகத்தாருக்கு நீங்கள் சுவிசேஷ சுடர்களாக ஒளி கொடுப்பீர்களா? உங்கள் சுடர் வெளிச்சத்தில், புற ஜாதியினரை கிறிஸ்துவண்டை கொண்டு வருவீர்களா?

சூரியனிலும் திரித்துவம் இருக்கிறது. உயரத்திலே அக்கினி பிளம்பாய் நின்று கொண்டிருப்பதும் சூரியன்தான். அதிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர்களும் சூரியனால்தான். ஒளிக்கதிர்களிலிருந்து தோன்றும் வெப்பமும் சூரியனால்தான்.

உயர இருக்கும் சூரியனாகிய அக்கினிப் பிளம்பு பிதாவாகிய தேவனையும், பூமிக்கு வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், அதிலிருந்து வரும் உஷ்ணம் பரிசுத்த ஆவியானவரையும் காண்பிக்கின்றன. கர்த்தருடைய திரித்துவம் சூரியனிலிருந்து வெளிப்படுவதைக் கண்டு நீங்கள் பூரிக்கிறீர்கள். அவரே, உங்களிலிருக்கும் திரித்துவமாகிய ஆவி, ஆத்துமா, சரீரத்தை பரிசுத்தமாய்ப் பாதுகாக்க வல்லமையுள்ளவர்.

வெளிச்சத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி, மணிக்கு 1,84,000 மைல் வேகத்தில் செல்லும் அதன் வல்லமையைப் பெரிதாகக் குறிப்பிடுகிறான். தத்துவ விஞ்ஞானி, "வெளிச்சமே சத்தியம்" என்கிறான். பக்தர்கள், "தூய்மையே வெளிச்சம்" என்கிறார்கள். நாமோ, "பாவ இருளைப் போக்கும் பரிசுத்த ஒளியே கிறிஸ்து" என்று சொல்லுகிறோம்.

வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபை யையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்" (சங். 84:11). "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" (யோவா. 8:12) என்று இயேசு சொன்னார். அன்று நட்சத்திரங்கள், சாஸ்திரிகளை ஒளியாகிய கிறிஸ்துவண்டை வழி நடத்தின. தேவபிள்ளைகளே, அந்த இயேசுகிறிஸ்து நீதியின் சூரியனாய் உங்களது உள்ளத்தையும், இருதயத்தையும் பிரகாசிக்கச் செய்வாராக.

நினைவிற்கு:- "நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்" (மத். 13:43).