முப்புரி நூல்!

"ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே" (பிர. 4:10).

நட்பு ஏன் முக்கியமானது என்பதைக் குறித்து, ஞானி இங்கே அருமையான விளக்கம் தருகிறார். தனிமையாயிருப்பது ஆபத்தானது, வேதனையானது. ஆகவே தான் வேதம் சொல்லுகிறது, "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்" (பிர. 4:9). "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (பிர. 4:12).

முப்புரிநூல் என்பதைக் குறித்து, ஒவ்வொரு திருமணங்களிலும் போதகர்கள் விளக்கம் கொடுப்பதை காணலாம். "கணவன், மனைவி, கர்த்தர்" ஆகிய மூன்று பேரும் இணைந்ததே, "முப்புரிநூல்." கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஆழமான நட்பும், சிநேகிதமும் இருக்க வேண்டும். மட்டுமல்ல, அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு செடிகளை ஒன்றோடொன்று ஒட்ட வைக்கும்போது, அது ஒரு புதிய செடியை உருவாக்குகிறது. அதைப்போல ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒருமனமாகும்போது, அன்பின் ஐக்கியம் கொள்ளும்போது, அந்த குடும்பம் மிகவும் மேன்மையுள்ளதாய் விளங்கும். மட்டுமல்ல, அந்தச் செடியானது, திராட்சை செடியாகிய கிறிஸ்துவோடு ஒட்டப்பட வேண்டும். நீங்கள் அவரில் நிலைத்திருப்பீர்களென்றால், திரளான கனிகளைக் கொடுப்பீர்கள்.

தேவபிள்ளைகளே, உங்களோடு இணைந்து ஜெபிக்கக்கூடிய ஜெப நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உண்மையாய் ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்கொருவர் மன்றாடுகிற சிநேகிதர்கள் அவசியம். அப்படிப்பட்ட சிநேகிதர்கள் எனக்கு கிடைக்கவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். முதலாவது, நீங்கள் மற்றவர்களுக்காக ஊக்கமாக ஜெபிக்க ஆரம்பித்து விடுங்கள். அப்பொழுது உங்களோடு ஜெபிக்கக்கூடியவர்கள் தானாகவே உங்களுக்குக் கிடைப்பார்கள்.

பாருங்கள்! தானியேலுக்கு பிரச்சனை ஏற்பட்டபோது, அவர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோடு இணைந்து ஜெபித்தார். அப்படி ஜெபித்தபோது கர்த்தர் தானியேலுக்கு மறைபொருட்களை வெளிப்படுத்திக் கொடுத்தார் (தானி. 2:18,19) தானியேல் எவ்வளவு உயர்ந்த நிலைமையிலிருந்தபோதிலும், அவருடைய இருதயத்தின் பாரங்களை பகிர்ந்துகொள்ள, அவருக்கே சிநேகிதர் தேவையாய் இருந்ததென்றால், உங்களுக்கும் நிச்சயமாகவே சிநேகிதர் தேவை.

"கடவுள்தான் எனக்கு நண்பராய் இருக்கிறாரே, இது போதாதா? மற்ற உலகப்பிரகாரமான நண்பர்கள் எதற்கு?" என்று நீங்கள் சொல்வீர்களென்றால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாயிருப்பீர்கள். ஏனென்றால், ஒருமனப்பாட்டின் ஜெபமானது மிக வலிமையுள்ளது. ஒருவன் ஆயிரம் பேரை துரத்தினால், இரண்டுபேர் இணைந்து பதினாயிரம் பேரை துரத்துவார்கள். ஒருமனமாய் நிற்கும்போது, உங்களுடைய ஜெபம் கேட்கப்படும். இரண்டு மூன்றுபேர் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடி வரும்போது, நிச்சயமாகவே கர்த்தர் அந்த இடத்தில் வந்து விடுவார். தேவபிள்ளைகளே, உங்களுக்காக உண்மையாய் ஜெபிக்கக்கூடிய நண்பர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு" (நீதி. 18:24).