கழுகு!

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்" (ஏசா. 40:31).

வேதத்திலே, கழுகுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. கழுகைக் குறித்து வாசிக்கும்போதெல்லாம், அங்கே கர்த்தர் ஆவிக்குரிய நல்ல பாடங்களை வைத் திருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அவைகளை தியானிப்போமா?

கழுகுகள் மற்ற எல்லாப் பறவைகளைப் பார்க்கிலும், உயரத்தில் பறந்து செல்லுகின்றன. மிக உயரத்திலே தங்கள் கூட்டைக் கட்டுகின்றன (யோபு 39:27). அவைகள் சிட்டுக்குருவிகளைப்போல, கீழே பறந்து கொண்டிருப்பதில்லை. காகங் களைப்போல, தோட்டியாய் அலைந்து கொண்டிருப்பதில்லை.

உங்களுக்கும் இந்த உன்னத ஆவிக்குரிய அனுபவம் தேவை. கிறிஸ்துவுடனே கூட உன்னதங்களிலே உலாவுகிற ஒரு அனுபவம் தேவை. நீங்கள் உலக கவர்ச்சியினால் இழுக்கப்படாமல், ஜெப ஜீவியத்திலே, பரிசுத்தத்திலே, தேவனோடுள்ள ஐக்கியத்திலே நிலைத்திருக்க வேண்டும். உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்! கழுகைப்போல உன்னதங்களில் பிதாவோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பதுதான், அவருடைய அந்தரங்க வாழ்க்கையாயிருந்தது. அந்த உன்னத அனுபவங்களை விரும்பி, அதிகாலையில் வனாந்தரமான இடத்திற்கு சென்று, உயர்ந்த மலைகளின்மேல் ஏறி, இரவெல்லாம் ஜெபித்துக் கொண்டிருப்பார். தேவபிள்ளைகளே, அப்படிப்பட்ட உன்னத அனுபவங்களை வாஞ்சியுங்கள். "பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ. 3:2).

ஆபிரகாம் தன் சொந்த ஜனத்தையும், வீட்டையும், தேசத்தையும் விட்டுப் புறப் பட்டதின் காரணம், உன்னதங்களிலே தன்னுடைய கூட்டைக் கட்டும்படியாகத் தான். வேதம் சொல்லுகிறது, அவர் பரம தேசத்தையே நாடினார் (எபி. 11:16). "ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்" (எபி. 11:10).

கழுகு தன் கூட்டைப் பூரணமாய் கட்டுகிறது. எல்லாப் பறவைகளைப் பார்க் கிலும் விசேஷமான கூடு, கழுகு கட்டுகிற கூடுதான். ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒருமுறை ஒரு கழுகு எல்லாப் பறவைகளையும் அழைத்து, "கூடு கட்டுகிறது எப்படி?" என்பதை, சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது.

முதலில் சில குச்சிகளையும், முட்களையும் எடுத்து, ஆரம்ப அமைப்பை அமைக்க வேண்டுமென்று சொன்னவுடனே, மேற்கொண்டு பொறுமையில்லாத காகம், "எனக்கு எல்லாம் தெரியும், தெரியும்" என்று பறந்து சென்றதாம். இப்படி படிப்படியாக கழுகு சொல்லச் சொல்ல, ஒவ்வொரு பறவையாக "எனக்குத் தெரியும்" என்று சொல்லி பறந்து விட்டதாம். "பூரணமாக கூடு கட்டுவது எப்படி?" என்பதைக் கேட்க, எந்த பறவைக்கும் பொறுமையில்லை.

அதைப்போலத்தான், அநேகர் ஒரு சில சத்தியங்களை கேட்டு விட்டு, எல்லாம் எனக்குத் தெரியும் என்று பறந்து விடுகிறார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் இப்படி நடவாமல், பூரணத்திற்கு நேராய் கடந்து செல்லுங்கள். கிறிஸ்துவின் பூரணம் உங்களில் காணப்பட, கர்த்தருடைய முழு உபதேசத்திற்கும் உங்களை அர்ப்பணியுங்கள்.

நினைவிற்கு:- "நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது" (சங். 103:5).