அக்கினி!

"நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது" (ஏசா. 43:2).

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையானவைகள். கர்த்தர் எல்லாச் சூழ்நிலையிலும் உங்களோடிருப்பார். அக்கினியில் நடக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் கலங்காதேயுங்கள். அக்கினியில் மூன்று வகை உண்டு. 1) மனிதனால் உண்டாக்கப்படும் அக்கினி. 2) சாத்தானால் உண்டாக்கப்படும் அக்கினி. 3) கர்த்தரிடத்திலிருந்து வருகிற அக்கினி.

முதலாவது, நேபுகாத்நேச்சார் என்ற ராஜா, தான் உருவாக்கின பொற்சிலையை வணங்கவில்லை என்ற கோபத்தினால், அக்கினிச்சூளையை ஏற்படுத்தினான். தேவ பிள்ளைகளாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் போடுவதற்கு, அந்தச்சூளை இன்னும் ஏழு மடங்கு சூடாக்கப்பட்டது. இது மனிதன் உண்டாக்கின அக்கினி.

"நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்" என்று வாக்குப்பண்ணின கர்த்தர், அவர்களை அக்கினியில் வேகாதபடி பாதுகாத்தார். "அக்கினிஜுவாலை உன் பேரில் பற்றாது" என்ற வார்த்தையின்படி, அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றி எரியவில்லை. அவர்களைக் கட்டியிருந்த கயிறுகள்தான் எரிந்து, அறுந்து விழுந்தது. அக்கினிஜுவாலையிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று வாக்குப்பண்ணின கர்த்தர் தாமே, அக்கினிச்சூளையில் இறங்கி நடந்தார், உலாவினார்.

பலகோடி ரூபாய் செலவில் நேபுகாத்நேச்சார் உருவாக்கின சிலையை, ஜனங்கள் பார்க்கவில்லை; அக்கினிச்சூளையைத்தான் பார்த்தார்கள். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளோடு நடக்கிறதையும், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் எவ்வளவு உண்மையுள்ளவரென்பதையும் பார்த்தார்கள். தேவபிள்ளைகளே, அந்தக் கர்த்தர் உங்களோடிருக்கிறார். உங்களோடு என்றென்றைக்கும் நடப்பார்.

இரண்டாவது, சாத்தான் கொண்டு வருகிற அக்கினி. அந்த அக்கினியை அவன் நாவிலே வைக்கிறான். "நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது" (யாக். 3:6).

சிந்தித்துப் பாருங்கள்! நரக அக்கினியிலே கொளுத்தப்பட சாத்தான் நாவையே பயன்படுத்துகிறான். சிலருடைய நாவுகள் பாதாளத்தின் அக்கினியையே இறக்கு கிறது. கோபத்தையும், எரிச்சலையும் மூட்டுகிறது. வாய் கூசாமல் புண்படுத்திப் பேசி விடுகிறார்கள். தேவபிள்ளைகளே, பொல்லாதவர்களுடைய கொடிய வார்த்தைகளிலிருந்து கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் அக்கினிச்சூளையிலே நடந்தாலும் அது உங்களைச் சேதப்படுத்தாது.

மூன்றாவது, அது கர்த்தருடைய அக்கினி. பரலோகத்திலிருந்து உங்களை நிரப்புகிற பரிசுத்தாவியாகிய அக்கினி. அந்த அக்கினியை இயேசுகிறிஸ்து உங்களுக்கு வாக்குபண்ணியிருக்கிறார். எலியா ஜெபம் பண்ணினபோது, வானத் திலிருந்து அக்கினி இறங்கியது. ஜனங்களெல்லாரும், "அக்கினியால் உத்தரவு அருளுகிற தேவனே தேவன்" என்று சொல்லிக் கர்த்தரைப் பணிந்துக்கொண்டார் கள். தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தரை பணிந்துக் கொள்ளுவீர்களா?

நினைவிற்கு:-" பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்" (லூக். 12:49).