ஆகாய விரிவு!

"ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்" (ஆதி. 1:6).

நம்முடைய உள்ளம் நீல நிறமான ஆகாய விரிவைப் பார்க்கும்போது, மகிழ்ந்து, களிகூர்ந்து துள்ளுகிறது. "ஆகாய விரிவு" என்பது, உன்னதமான ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறிக்கிறது. ஆகாயத்தைப் பார்க்கும்போது, மேகஸ்தம்பங்களோடு இஸ்ரவேலருக்கு முன் நடந்த தேவனை நாம் நினைவுகூருகிறோம்.

வானத்தைப் பார்க்கும்போது, வானங்களின் மேலே ஏறி பிதாவினிடத்திற்கு சென்ற இயேசுகிறிஸ்துவை நினைவுகூருகிறோம். ஆகாய விரிவைப் பார்த்து, தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையைப் போற்றுகிறோம். வேதம் சொல்லு கிறது: "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங் களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபே. 2:7). "அவர் கிறிஸ்துவுக் குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபே. 1:3).

தாவீது ராஜா ஆகாய விரிவைப் பார்த்தபோது, அவருடைய உள்ளம் கர்த்தரைத் துதிக்க வேண்டுமென்று பொங்கினது. "அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்" (சங். 150:1). "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது" (சங். 19:1) என்று அவர் சொல்லித் துதிக்கிறார். கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம், பரந்து விரிந்து கிடக்கும் ஆகாய விரிவின் கொள்ளை அழகு, கர்த்தரைத் துதிக்கும்படி உங்கள் இருதயத்தை ஏவி எழுப்புகிறது.

மின்னல்கள் வல்லமையாக இந்த ஆகாய விரிவிலே மின்னி, இருளை வெளிச் சமாக்குகின்றன. இடிமுழக்கங்கள், யூதராஜ சிங்கம் உயிரோடிருக்கிறார் என்பதை அறிவிக்கின்றன. ஆகாயம் முழுவதிலும், கர்த்தர் கோடிக்கணக்கான நட்சத்திரங் களை பரப்பி வைத்திருப்பதன் மூலம், உங்கள் மேலுள்ள அன்பை வெளிப்படுத் துகிறார்.

ஒருநாள் நீங்கள், ஆகாய மண்டலத்திலுள்ள ஒளியைப் போல பிரகாசிப்பீர்கள். வேதம் சொல்லுகிறது: "ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானி. 12:3).

நீங்கள் இந்த உலகத்திலே பிறந்திருந்தாலும், இந்த உலகத்திற்குரியவர்களல்ல. ஆகாய விரிவை நோக்கிப் பார்த்தவர்களாக பரலோக தரிசனத்தோடு ஜீவித்து, இந்த உலகத்தின் வழியாக அந்நியரும் பரதேசிகளுமாய் நித்தியத்தை நோக்கி கடந்து செல்லுவீர்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது (பிலி. 3:20). அங்கே உங்கள் பிதா இருக்கிறார் (மத். 6:9). உங்கள் இரட்சகர் இருக்கிறார் (அப். 5:31, பிலி. 3:20). உங்களுக்கு வாசஸ்தலங்களிருக்கின்றன (யோவா. 14:2). உங்கள் எல்லாருடைய பெயர்களும் அங்கு எழுதப்பட்டிருக்கின்றன (லூக். 10:20, பிலி. 4:3). அங்கே உங்களுக்கு வாடாத ஜீவ கிரீடமும், மகிமையான சுதந்தரங்களுமுண்டு. உங்கள் ஜீவன் அங்கே கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறது (கொலோ 3:3).

நினைவிற்கு:- "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ. 3:1,2).