வாசற்படி!

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்" (வெளி. 3:20).

"வாசற்படி" என்பது, ஒரு வீட்டின் வாசலைக் குறிக்கிறது. வீட்டிற்குள்ளே யிருந்து, வாசற்படியிலே நிற்கிறவர்கள் யார் என்று அறிந்துகொள்ளக்கூடிய சிறு லென்ஸ், பல வாசல்களிலே பொருத்தப்பட்டிருக்கும். அதனால் வாசலிலே நிற்கிறவர்கள் யார் என்று அறிந்துகொள்ளலாம். தேவபிள்ளைகளே, இயேசு உங்களுடைய வீட்டின் கதவைத் தட்டுகிறார். உங்கள் வீட்டில் வாசம் பண்ண விரும்புகிறார். அவரை, உங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளுவது எத்தனை எத்தனை ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்!

இயேசு இந்த உலகத்திலிருந்தபோது, பெத்தானியாவிலுள்ள ஒரு வீட்டார் அவருக்குக் கதவைத் திறந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயர் கொண்ட ஸ்திரீ அவரை தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள் என்று வேதம் சொல்லுகிறது (லூக். 10:38). இயேசு சென்ற வீடுகளிலெல்லாம், நிச்சயமாகவே அற்புதம் நடக்கும். இயேசு கடந்து வரும்போது, தேவ சமாதானம் சந்தோஷம் கடந்து வரும்.

அது மார்த்தாள், மரியாள், லாசரு வாழ்ந்த சிறிய குடும்பம். அவர்களுடைய பெற்றோர், முன்னரே மரித்து போயிருந்திருக்கலாம். கர்த்தரே, அந்த குடும்பத் துக்குத் தகப்பனாயிருந்தார். லாசரு மரித்தபோது, கர்த்தர் அங்கே வந்து, மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினார். கிறிஸ்து உங்களுடைய வீட்டிற்கு வரும்போது, அக்கிரமத்திலும், பாவத்திலும் மரித்துப் போய் இருக்கிறவர்களை, நிச்சயமாகவே உயிர்ப்பிப்பார். ஆவியிலே பெரிய விடுதலை உண்டாகும்.

இயேசு பிரவேசித்த இன்னொரு வீடு, சகேயுவின் வீடு. சகேயு ஒரு பாவியான மனுஷன். அவனுடைய வீடோ, அநியாயமாய் வாங்கின சம்பாத்தியத்தால் நிரம்பியிருந்த வீடு. சகேயுவின் உள்ளக் கதவை ஆண்டவர் தட்டினார். "சகேயுவே, இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்" (லூக்கா 19:5) என்றார். கர்த்தர் அவனுடைய வீட்டிலே தங்க விரும்பினவுடன், அவன் அநியாயமாய் வாங்கின எல்லாவற்றையும், நாலத்தனையாய் திருப்பிக் கொடுக்கத் தீர்மானித்தான். பாவங்களை விட்டுவிடத் தீர்மானித்தான். அன்றைக்கு அந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

வேதம் சொல்லுகிறது, "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" (1 யோவா. 1:8). உங்களுடைய பாவங்களை நீங்கள் அறிக்கையிடும்போது, கர்த்தர் எல்லா பாவங்களையும் நீக்கி உங்களை இரட்சிப்பார். "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப். 16:31).

இயேசு பிரவேசித்த இன்னொரு வீடு, யவீருவின் வீடு. அவன் ஜெப ஆலய தலைவனாயிருந்தான். ஆனாலும் அவன் வீட்டில், அழுகையின் சத்தம் கேட்டது. அவனுடைய சிறுபிள்ளை மரித்து போனது. துக்கம் நிறைந்த அந்த வீட்டில் இயேசு வந்தபோது, சந்தோஷமாய் மாறியது. காரணம், அவர் அந்த குழந்தையின் கைகளைப் பிடித்து, "சிறு பெண்ணே எழுந்திரு" (மாற்கு 5:41) என்று சொல்லி, உயிர்ப்பித்தார். தேவபிள்ளைகளே, உங்கள் வீடு கர்த்தர் வந்து போகிற வீடாக அல்ல, என்றென்றைக்கும் தங்கியிருக்கிற வீடாயிருக்கட்டும். வாசற்படியிலே தட்டுகிற கர்த்தருக்கு கதவைத்திறந்து, உங்களோடு வாசம் பண்ணும்படி அழைப்பீர்களா?

நினைவிற்கு:- "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்" (லூக். 24:29).