புல் பூண்டு!

"பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்" (ஆதி. 1:11).

வெறுமையும், ஒழுங்கின்மையுமாய் கிடந்த இந்த பூமியைக் கர்த்தர் சீர்ப்படுத்த சித்தமானபோது, அழகிய மரங்களை முளைக்கச் செய்து, கனிதரும் விருட்சங் களை உண்டாக்கி, நம்மேல் வைத்த கர்த்தருடைய கிருபை எத்தனை பெரியது!

கர்த்தர் பூமியிலே மூன்று முக்கியமான காரியங்களை உண்டாக்கினார். 1. புல், 2. பூண்டு, 3. கனி விருட்சங்கள். இவை மனிதனுக்கு நிழலாட்டமாயிருக் கின்றன. முதலாவது, துன்மார்க்கரை வேதம் புல்லுக்கு ஒப்பிடுகிறது. "துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்" (சங். 92:7).

இரண்டாவது, பொல்லாதவர்களை வேதம், பூண்டுக்கு ஒப்பிடுகிறது. "பொல் லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல் வாடிப்போவார்கள்" (சங். 37:1,2). மூன்றாவது, நீதிமான்களை கர்த்தர் கனிதரும் விருட்சத்திற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங். 1:3). தேவபிள்ளைகளே, நீங்கள் நல்ல கனிதரும் விருட்சங்களாய் விளங்குகிறீர்களா?

யோசேப்பின் வாழ்க்கையைப் பாருங்கள்! அவருடைய வாழ்க்கையிலே எத்தனையோ பாடுகள், உபத்திரவங்கள், நிந்தைகள், அவமானங்களை சகிக்க வேண்டியதிருந்தது. ஆனாலும் அவர் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். வேதம் சொல்லுகிறது, "யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனி தரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்" (ஆதி. 49:22).

கர்த்தர் உங்களிடம் கனியுள்ள வாழ்க்கையை எதிர்பார்க்கிறார். அவருக்கு நல்ல கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றும், அந்த கனிகள் மிகுதியாயிருக்க வேண்டுமென்றும் விரும்புகிறார். "நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்" (யோவா. 15:16) என்று இயேசு சொன்னார். அநேகருடைய வாழ்க்கையிலே வெறும் இலைகள்தான் காணப்படுகின்றன. அவை பாரம்பரிய, சடங்காச்சார, பெயர்க் கிறிஸ்தவ, பகட்டான இலைகளாய் இருக்கின்றன. கர்த்தர் இலைகளை அல்ல, கனிகளைத் தான் விரும்புகிறார். அதற்காகவே அவர் ஜீவனைக் கொடுத்தார்.

கனி கொடுக்காத ஒவ்வொரு மரமும் நிலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இறைத்த தண்ணீரும், இட்ட உரமும், அதைப் பண்படுத்த பட்டபாடுகளும் வீண். கனியற்ற ஜீவியம் ஒரு தனிமனிதனை மட்டுமல்ல, அவனோடு கூடவுள்ள மற்றவர்களையும் கெடுக்கும்.

கர்த்தர் துக்கத்தோடு அத்திமரத்தைப் பார்த்து: "இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது" (லூக். 13:7) என்றார். தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கென்று கனி கொடுக்க தீர்மானியுங்கள்! செயல்படுங்கள்!

நினைவிற்கு:- "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்" (எபே. 5:9).