விடிவெள்ளி!

"நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்" (வெளி. 22:16).

கப்பல் மாலுமிகளுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பார்க்கும்போது, தாங்க முடியாத சந்தோஷமாயிருக்கும். அதிலும் கப்பல் இருளிலும், புயலிலும் சிக்கி தவிக்கும்போது, திசைகாட்டும் அந்த விடிவெள்ளி நட்சத்திரம் அவர்களுக்கு நம்பிக்கையின் நட்சத்திரமாகவே அமையும்.

தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்து உங்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறார். அந்த விடிவெள்ளி நட்சத்திரம், உங்கள் உள்ளத்திலுள்ள காரிருளின் ஆதிக்கங்களை நீக்கி, பரலோக வெளிச்சத்தைக் கொண்டு வரும். கர்த்தர் "வெளிச்சம் உண்டாவதாக" (ஆதி. 1:3) என்று சொன்னவுடனே, வெளிச்சம் உண்டானது. இருள் நீங்கிப்போனது. அதுபோலவே, பாவ இருளில் மறைந்து கிடந்த உங்கள் உள்ளத்தை, கிறிஸ்துவாகிய விடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கச் சித்தமானார்.

அப். பவுல், "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்" (2 கொரி. 4:6) என்று எழுதுகிறார்.

நீங்கள் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தை ஆவலோடு நோக்கிப் பார்த்து, "பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்" என்று சொல்லும்போது, அவர் பாவ மன்னிப்பாகிய மீட்பின் வெளிச்சத்தை, உங்கள் இருதயத்திற்குள் கொண்டு வருவார் (எபே. 1:7, கொலோ. 1:14). விடிவெள்ளி நட்சத்திரமான இயேசு பாவ மன்னிப்பின் வெளிச்சத்தை மாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையை பிரகாசிப்பிக்கும் வெளிச்சமாகவுமிருக்கிறார். மீகா தீர்க்கதரிசி சொல்லுகிறார், "நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்" (மீகா 7:8).

சில கிராமத்தில், விவசாயிகள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழும்பி, வயலுக்கு தண்ணீர் இறைக்க வயல்வெளிக்கு செல்லுவார்கள். எங்கும் ஒரே இருளாக இருக்கும். வழிநெடுக தவளைகளின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். குளிர்ந்த இனிமையான காற்று வீசிக் கொண்டிருக்கும். அந்த சூழ்நிலையில் வானத்திலுள்ள நட்சத்திரங்களெல்லாம், சிரித்து மகிழ்ந்து வெளிச்சத்தை வீசிக் கொண்டிருக்கும். அந்த நட்சத்திரங்களின் ஒளியில் நடந்து செல்லுவது, எத்தனை இனிமையான அனுபவம்! ஆம், கர்த்தரே உங்களுக்கு வெளிச்சமானவர்.

இயேசு உங்களுடைய வாழ்க்கையில் வெளிச்சமாயிருக்கும்போது, எந்த இருளின் ஆதிக்கமும் உங்களை மேற்கொள்ளுவதில்லை. நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக முன்னேறி செல்லுவீர்கள். வேதம் சொல்லுகிறது, "இருளில் இருக் கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" (மத்தேயு 4:15).

தேவபிள்ளைகளே, துயரமும் துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில் விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசுதான், உங்களை அருமையாய் வழி நடத்துகிறவர். இயேசு உங்கள் வாழ்நாளெல்லாம் தம் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்வார். அந்த பிரகாசத்தினால் நீங்கள் கர்த்தருக்காக பிரகாசிப்பீர்கள்.

நினைவிற்கு:- "ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானி. 12:3).