சோதனையா?

"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை" (2 கொரி. 4:8).

உங்களுக்கு நெருக்கம் வரும்போது, நீங்கள் ஒடுங்கிப்போவதில்லை. கலக்கங்கள் வரும்போது, மனமுறிவடைகிறதில்லை. சோதனை வரும்போது, சோர்ந்து போவதில்லை. உங்களுக்குப் பாடுகளும், உபத்திரவங்களும் வரத்தான் செய்யும். இயேசு சொன்னார், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33).

முதலாவது, கர்த்தர் உங்களுக்குத் துணையாயிருக்கிறபடியினால், நீங்கள் மனமுறிவடைகிறதில்லை. அவர் உங்களுடைய திராணிக்கு மிஞ்சி ஒருபோதும் உங்களை சோதிக்கிறதில்லை. சோதனைகளுக்குத் தப்பும் வழிகளை உங்களுக்கு உண்டாக்குவார்.

இரண்டாவது, சோதனைகள்தான் உங்களைக் கிறிஸ்துவைப்போல் மாற்றுகிறது. சோதனை வேளைகளில் நீங்கள் கிறிஸ்துவை நெருங்கி கிட்டிச் சேருகிறீர்கள். தேவ குமாரனைப் பாடுகள் எப்படி பூரணத்திற்குள் கொண்டு சென்றனவோ, அதைப்போல பாடுகளும், சோதனைகளும் கிறிஸ்துவின் சாயலிலே உங்களை மறுரூபமாக்குகின்றன.

கர்த்தரிடத்திலிருந்து வரும் சிட்சைகூட உங்களுக்கு ஆசீர்வாதம்தான். அது அவர் உங்கள்மேல் வைத்திருக்கிற அன்பை வெளிப்படுத்துகிறது. வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்" (எபி. 12:6).

மூன்றாவது, சோதனையின் மூலம் கர்த்தர் உங்களை பெரிய வேலைக்கு ஆயத்தப்படுத்துகிறார். சாதாரணமாக அரசாங்கத்தில் ஒருவனை வேலைக்கு அமர்த்தும்போது, முதலில் அவன் அதற்கு தகுதியுள்ளவன்தானா, உயர்ந்த பதவியை நிர்வகிக்கக்கூடிய திறமை, படிப்பு, புத்தி, விவேகம் இருக்கிறதா, என்று சோதிப்பார்கள். அதன்பின்னரே வேலையில் அமர்த்துவார்கள்.

யோசேப்பைப் பாருங்கள்! அவர் எவ்வளவுக்கெவ்வளவு சோதனைகளுக்குள்ளும் பாடுகளுக்குள்ளும் சென்றாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு உயர்வுகள் வந்து கொண்டேயிருந்தன. முடிவில், கர்த்தர் பார்வோனுடைய வீட்டில் மிக உன்னத ஸ்தானத்தைக் கொடுத்தார். தானியேல் சிங்ககெபியிலிருந்து எடுக்கப் பட்டபோது, ராஜாவினுடைய கண்களிலே தயவும் பாசமும் கிடைத்தன.

நான்காவது, சோதனை மூலம் உங்களுடைய விசுவாசம் பெலப்படுகிறது. வேதம் சொல்லுகிறது, "அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும், கனமும், மகிமையுமுண்டாகக் காணப்படும்" (1 பேதுரு 1:7).

தேவபிள்ளைகளே, அழிந்துபோகிற பொன்னுக்கு அத்தனை சோதனைகள் இருக்குமென்றால், விசுவாசம் அழியாமல் நித்தியமாய் நிலைநிற்பதற்கு சோதனை அவசியம் அல்லவா? "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக். 1:12).

நினைவிற்கு:- "உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரி. 10:13).