காவலாளியோ?

"என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்" (ஆதி. 4:9).

மனுஷன் தேவனைப் பார்த்து கேட்ட முதல்கேள்வி, "நான் காவலாளியோ?" என்பதுதான். அதற்கு கர்த்தர், "மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத் தாருக்குக் காவலாளனாக வைத்தேன்" (எசே. 3:17) என்றார். ஆம், நீங்கள் காவலாளிகள்தான். கர்த்தர் உங்களை காவலாளிகளா வைத்திருக்கிறார்.

ஜனங்கள் தங்களுடைய வீடுகளைக் காத்துக் கொள்ளுவதற்காக இரவு நேரங் களில் காவலாளிகளை (Watchmen) நியமிக்கிறார்கள். அரசாங்கம் மக்களைப் பாது காப்பதற்காக, காவல் படையாகிய போலீஸ் (Police) இலாகாவை வைத்திருக்கிறது. அரசாங்கம் பகைவரிடத்திலிருந்து தேசத்தை காவல் காத்து மீட்பதற்காக இராணு வத்தை (Military) வைத்திருக்கிறது.

இதைத் தவிர ஒவ்வொரு தேசத்தின் எல்லையெங்கிலும் ரடார் (Radar) என்ற கருவி நிறுத்தப்பட்டிருக்கும். இதிலிருந்து இரவும் பகலும் வானமண்டலத்தை நோக்கி மின்சாரக்கதிர்கள் செலுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். எதிரிகளின் விமானம் வந்தால், இந்த மின்சாரக் கதிர்கள் அந்த விமானத்தில் மோதி, கீழே வந்து இமைப்பொழுதில் அந்த விமானத்தைப் பற்றிய விபரங்களைக் கொடுக்கின்றன. மட்டுமல்ல, தானாகவே இயங்கி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்துகின்றன.

இயந்திரங்களான மிஷின்கள்கூட, இரவும் பகலும் தேசத்தைக் காவல் காக்கும் போது, நீங்கள் கர்த்தருடைய காவலாளிகளாயிருக்க வேண்டியது எவ்வளவு அவசியம். தேனீக்களைப் பாருங்கள்! ஒவ்வொரு தேன் கூட்டிலும் வாசலில் இரண்டு தேனீக்கள் தங்களுடைய செட்டைகளை அடித்து, அந்தக் கூட்டை காவல் காத்துக்கொண்டு நிற்கிறதைப் பார்க்கலாம். வேறு எந்த ஜந்துவும் பிரவேசிக்காத படி அவை பாதுகாக்கின்றன.

உங்களுடைய சரீரத்திலே, இரத்தத்தைப் பாதுகாக்க வெள்ளை அணுக்களிருக் கின்றன. அவை நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடுகின்றன. கண்களைப் பாதுகாக்க இமைகளிருக்கின்றன. இமைகள் கண்களின் கருவிழியைப் பாதுகாக்கின்றன. தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரு காவலாளி என்பதை மறந்து போகாதேயுங்கள். நீங்கள் எவற்றையெல்லாம் காவல் காக்க வேண்டும்?

முதலாவதாக, உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். சாலொமோன் ஞானி சொல்லுகிறார், "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தை காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்" (நீதி. 4:23). இருதயமாகிய ஆத்துமா அழியாதது, நித்தியமானது. நீங்கள் இதை சரியாகக் காவல் காக்காமல் போனால், சாத்தான் ஆத்துமாவில் பாவத்தைக் கொண்டு வந்து, நித்திய வேதனைக்குள் தள்ளி விடுவான்.

இரண்டாவதாக, உங்களுடைய கண்களுக்கு காவல் வைக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது: "கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!" (மத். 6:22,23). உங்களுடைய கண்கள் நேராய் நோக்கக்கடவது (நீதி. 4:25). தேவபிள்ளைகளே, உங்களுடைய இருயத்தையும், கண்களையும் காத்துக் கொள்வீர்களா?

நினைவிற்கு:- "எருசலேமே, உன் மதில்களின் மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன்" (ஏசா. 62:6).