எப்படி நடப்பது?

"நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்" (ஆதி. 13:17).

ஒரு மனிதனுடைய நடைகளைக் கொண்டு, அவனுடைய குணாதிசயத்தை சொல்லி விடலாம். சிலருடைய நடைகள் தளர்ந்துபோன, சோர்ந்து போன நடைகள். சிலருடைய நடைகள் உற்சாகமான, விறுவிறுப்பான நடைகள். சிலருடைய நடைகள் வீரனுடைய நடைகள். சாதுவின் நடையுமுண்டு, ராஜகெம்பீரமான நடையுமுண்டு, உழைப்பாளியின் நடையுமுண்டு.

ஆனால், இங்கே ஆபிரகாமின் நடைகளைக் குறித்துப் பார்க்கிறோம். ஒன்று, அது விசுவாச நடை. கர்த்தர் ஆபிரகாமுக்கு, "கால் மிதிக்கும் தேசமெல்லாம் உனக்குத் தருவேன்" என்று வாக்களித்தார். "நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி" (ஆதி. 13:17) என்று சொன்னார்.

அந்த நடையில் ஒரு நம்பிக்கையிருந்தது, எதிர்பார்ப்பிருந்தது. ஒரு நாள் தான் நடக்குமிடமெல்லாம் தனக்கும், தன் சந்ததிக்கும் சொந்தமாகும் என்கிற பெரிய உறுதியிருந்தது. தேவபிள்ளைகளே, உங்கள் நடைகள் விசுவாச நடைகள் தானா? "கர்த்தருடைய ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுவேன்" என்கிற விசுவாசம் உங்களுக்குள்ளே இருக்கிறதா?

அடுத்து, ஆபிரகாமுடைய நடைகள் உத்தமமான நடைகள். "நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு" (ஆதி. 17:1) என்று கர்த்தர் சொன்னார். கர்த்தர் உங்களிடத்தில் எதிர்பார்க்கிற ஒரு காரியம் உண்மையும், உத்தமமுமாகும். தேவ பிள்ளைகளே, உங்களுக்குக் கொடுத்திருக்கிற பொறுப்புகளிலே நீங்கள் உண்மையும் உத்தமமுமாயிருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார், "நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும், உத்தமனுமாயிருந்தான்" (ஆதி. 6:9). ஆகவே கர்த்தர் நோவாவோடு நடந்தார், உலாவினார், சஞ்சரித்தார்.

வேதம் முழுவதிலும் பல பரிசுத்தவான்கள் நடந்த நடைகளைக் குறித்தும், பாதைகளைக் குறித்தும் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் கர்த்தருடைய நடைகளோ, நீங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியானது. வேதம் சொல்லுகிறது: "தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்" (சங். 68:24).

கர்த்தருடைய நடைகள் பரிசுத்தமானது, தூய்மையானது. அவர் இஸ்ரவேலின் சேனைகளுக்கு முன்பாக நடந்தார். அவர் இம்மானுவேலராய் பூமியில் வந்த போது நடந்த நடைகள், முன் மாதிரியை, ஆத்தும பாரத்தை, ஜெப ஜீவியத்தைக் காண்பிக்கின்றன. அவர் காணாமல் போன ஆட்டை நோக்கி நடந்த நடைகள், மனதுருக்கத்தைக் காண்பிக்கின்றன. மட்டுமல்ல, அவர் நன்மை செய்கிறவராக வும், விடுவிக்கிறவராகவும் நடந்தார்.

நீங்கள் இயேசு நடந்த நடைகளின் அடிச்சுவடுகளை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களிலும் காணலாம். "நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்" (1 பேது. 2:21). தேவபிள்ளைகளே, அவருடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றும்பொழுது, ஜெயங்கொண்டவர்களாய் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- "ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்" (வெளி. 14:4).