சத்துருக்களா?

"உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்" (லேவி. 26:7).

உங்களை காரணமில்லாமல் பகைக்கிறவர்களும், அநியாயமாய் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சத்துருக்களும் ஏராளமுண்டு. இந்த உலகத்தில் பொறாமை இருக்கிறவரையிலும், பொறாமையை ஜனங்கள் உள்ளத்திலே ஊட்டுகிற சாத்தான் இருக்கிற வரையிலும், சத்துருக்கள் எழும்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்திற்குள் கர்த்தர் அழைத்துக் கொண்டு வந்தபோது, அங்கே அவர்களுக்கு சத்துருக்களாக ஏழு ஜாதிகளும், முப்பத்தியொரு ராஜாக்களுமிருந்தார்கள். அங்குள்ள பட்டணங்கள் அரணிப்பான பட்டணங்கள். அங்கிருந்த ஜனங்கள் ராட்சதப் பிறவிகள்.

ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் என்ன? "உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறு பேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள்" (லேவி. 26:7,8) என்பதாகும்.

தேவபிள்ளைகளே, சத்துரு வெள்ளம் போல வரும்போது, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக கொடியேற்றிய ஆவியானவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது ஒரு வழியாய் உங்களுக்கு விரோதமாய் வருகிறவர்கள், ஏழு வழியாய் உங்களை விட்டு ஓடிப்போவார்கள். ஒருவனும் எதிர்த்து நிற்க முடியாதபடி கர்த்தர் உங்களை நிரப்புவார்.

பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலருக்கு உலகப்பிரகாரமான சத்துருக்களிருந்தார் கள். அவர்கள் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் யுத்தம் செய்தார்கள். பகைவர் களை சங்கரித்து வெட்டி வீழ்த்தினார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டிலுள்ள தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கோ, யுத்தம் வித்தியாசமானதாயிருக்கிறது. நீங்கள் வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடுகிறீர்கள். துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும் யுத்தம் செய்கிறீர்கள்.

எந்த மனிதன் உங்களுக்கு சத்துருவாய் எழும்பி வந்தாலும், அவனுக்கு விரோதமாய் நீங்கள் யுத்தம் செய்யாமல், அவனுக்குப் பின்னால் இருந்து அவனைத் தூண்டி விடுகிற பல வகையான ஆவிகளோடு நீங்கள் யுத்தம் செய்யவேண்டியதிருக்கிறது.

சாத்தானுடைய நோக்கமே திருடுவதுதான். "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10) என்று இயேசு சொன்னார். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து வெளிப்பட்டார் (1 யோவான் 3:8).

தேவபிள்ளைகளே, எத்தனை ஆயிரம் சத்துருக்கள் உங்களை எதிர்த்து வந்தாலும் கலங்காதிருங்கள். ஏனெனில், சேனைகளின் கர்த்தர் உங்களோடிருக்கிறார். கர்த்தருடைய சேனையில் ஆயிரமாயிரமான தேவதூதர்களுண்டு; பரிசுத்தவான்களுண்டு; அக்கினி இரதங்களும், குதிரைகளுமுண்டு. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து ஜெயத்தைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- "இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" (லூக். 10:19).