ஏன் உபத்திரவம்?

"அவர் உன்னை சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்" (உபா. 8:3).

ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தருக்கு ஒரு நோக்கமுண்டு. ஒவ்வொரு பாடுக்குப் பின்பாகவும் ஒரு பாக்கியமுண்டு. உபத்திரவங்களுக்குப் பின்பாக ஒரு மேன்மையுண்டு. சிலுவைக்குப் பின்பாக ஒரு சிங்காசனமுண்டு. கிறிஸ்துவோடு பாடு அனுபவிக்கிறவர்கள், நிச்சயமாக அவரோடு மகிமையுமடைவார்கள்.

தேவபிள்ளைகளே, மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்பதை, திட்டமும் தெளிவுமாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் வேதத்தின் ஆழங்களையும், வல்லமைகளையும் தெரியப்படுத்தும்படி உபத்திரவத்தின் பாதையிலே உங்களை நடத்துகிறார். அதன் பின்பு உங்களை கர்த்தருக்குள் தேறினவனாக நிலைநிறுத்துகிறார். பரிசுத்தப்படுத்தி, மேன்மைப்படுத்துகிறார்.

வேதம் சொல்லுகிறது, "கர்த்தரோ, தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ள வர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்" (எபி. 12:10). ஒவ்வொரு மாராவுக்குப் பின்பும் ஒரு ஏலீமுண்டு. அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களுமுண்டு. ஒவ்வொரு வனாந்தரத்திற்குப் பின்பும் ஒரு கானானுண்டு. அது பாலும் தேனும் ஓடுகிற கானான். ஒவ்வொரு உபத்திரவத்திற்குப் பின்பும் கர்த்தருடைய ஆசீர்வாதமுண்டு. கர்த்தர் உங்களை தம்மைப்போல மாற்றுகிறார். மறுரூபப்படுத்துகிறார்.

ஒரு போதகர் சொன்னார், "நான் சிறுவனாயிருக்கும்போது மிகவும் குறும்புக் காரனாயிருந்தேன். என் தகப்பனார் ஒருநாள் என்னை பிரம்பை எடுத்து ஈவு இரக்கமில்லாமல் அடித்துவிட்டார். பட்டை பட்டையாய் காயம் ஏற்பட்டது. நான் அன்றிரவு படுக்கப் போனபின்பு அவர் என் அருகில் வந்து, என் காயங்களில் எண்ணெய் தடவி, முத்தமிட்டு எனக்காக கண்ணீரோடு ஜெபம்பண்ணினார்.

அதைக் கண்ட நான், என் குறும்பு செயலை விட்டுவிட்டு மனந்திரும்பினேன். என் தகப்பனார் அதுவரை பாராட்டின அன்பைப் பார்க்கிலும், அதன்பின்பு அதிகமாய் என்மேல் அன்பு பாராட்டினார்" என்று சொன்னார்.

கர்த்தர் உங்களைப் பாடுகளின் பாதையிலே, உபத்திரவங்களின் பாதையிலே கொண்டு செல்லும்போது, நிச்சயமாகவே உங்களுடைய உள்ளம் வேதனைப் படுகிறது. "ஏன் இது எனக்கு நேரிடுகிறது, ஏன் எனக்கு மட்டும் உபத்திரவம்?" என்று கதறுகிறீர்கள். ஆனால் அன்புள்ள தகப்பன் ஒருநாளும் உங்களை வீணாய் தண்டிப்பதில்லை, சிறுமைப்படுத்துவதில்லை.

வேதம் சொல்லுகிறது, "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோம. 8:28). தேவ பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரில் அன்புகூரும்போது, கர்த்தர் எல்லாவற்றையும் உங்களுடைய வாழ்க்கையிலே நன்மைக்கேதுவாகவே மாற்றி ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீரை புறப்படப் பண்ணினேன்" (உபா. 8:15).