என்ன இருக்கிறது?

"நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது?" (2 இராஜா. 4:2).

மரித்துப்போன ஒரு தீர்க்கதரிசியின் மனைவி, தன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்படி தேவ மனுஷனாகிய எலிசாவினிடத்தில் வந்தாள். கடன் சுமை அதிகமாயிருந்தது. அவளுக்கு உதவி செய்ய யாருமில்லை. கடன் கொடுத்தவன் பிள்ளைகளை அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான். அந்த இக்கட்டான வேளையில் தேவ மனுஷன் அவளைப் பார்த்து, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும், உன்னிடத்தில் என்ன இருக்கிறது, என்று கேட்டார்.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தர் அன்போடு உங்கள் அருகில் வந்து, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். மனந்திறந்து அவரிடத்தில் நீங்கள் கேட்கும்போது, உங்கள் குறைகளையெல்லாம் அவர் நிறைவாக்குவார். உங்கள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல்படுத்துவார். ஒரு அற்புதத்தைச் செய்து புது திருப்பத்தை உண்டாக்குவார். அவர், "ஆராந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு 9:10). நிச்சயமாகவே உங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார்.

அந்த விதவை, "இல்லை" என்ற பாட்டை பாடிக் கொண்டேயிருந்தாள். ஆனால் எலிசாவோ, "என்ன இருக்கிறது" என்று கேட்டார். இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது. அதுதான் ஒரு குடம் எண்ணெய். அந்தக் குடம் என்பது, சரீரத்தைக் குறிக்கிறது. எண்ணெய் என்பது, பரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் காண்பிக்கிறது.

நீங்கள் சரீரமாகிய மண்பாண்டத்திலே விலையேறப் பெற்ற பொக்கிஷமாக மகிமையின் ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள் (1 பேதுரு 4:14). மட்டுமல்ல, "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்" (கொலோ. 1:27). உங்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியின் வல்லமையை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்களுடைய குறைவுகளெல்லாம் நீங்கிப் போகும்.

எலிசா தீர்க்கதரிசி அவளைப் பார்த்து: "நீ போய், உன் அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேக வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, உன்னிடத்திலுள்ள எண்ணெயை அவைகளில் ஊற்று. அது எல்லாப் பாத்திரங்களையும் நிரப்பிவிடும். பின்பு நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள்" என்றார். அப்படியே கர்த்தர் அற்புதம் செய்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்குள்ளிருக்கிற அபிஷேகத்தை எத்தனை ஆயிரம் காலிப்பாத்திரங்களில் ஊற்றினாலும், அவைகளையெல்லாம் நிரம்பி வழியச் செய்ய கர்த்தர் வல்லமையுள்ளவர். இந்தியாவில் கோடிக்கணக்கான காலிப் பாத்திரங்களுண்டு. அவற்றையெல்லாம் நிரம்பச் செய்கிற வல்லமையை கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

அதற்காகவே, உங்களுடைய பாத்திரம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்படி கிருபை செய்கிறார் (சங். 23:5). உள்ளமாகிய பாத்திரத்தில் மட்டும் எண்ணெய் இருந்தால், அது உங்களுக்கு மட்டும்தான் பிரயோஜனம். ஆனால் நிரம்பி வழிகிறதாக இருக்கும்போது, அது தேசத்திற்கே பிரயோஜனமாயிருக்கும்.

நினைவிற்கு:- "என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்" (சங். 92:10).