எங்கே விழுந்தது?

"தேவனுடைய மனுஷன், அது எங்கே விழுந்தது என்று கேட்டான்" (2 இராஜா. 6:6).

யோர்தான் நதியின் ஆழமான பகுதிக்குள்ளே கோடரியின் இரும்புப் பகுதி பெயர்ந்து விழுந்தபோது, தேவனுடைய மனுஷன், "அது எங்கே விழுந்தது?" என்று கேட்டான்.

ஒரு கோடரியானது, அதன் கொம்பிலிருந்து பெயர்ந்து விழுவதற்கு முன்பாக பல எச்சரிப்புகளை கொடுக்கிறது. முதலில் அதிலிருந்து ஆப்புகள் ஒவ்வொன்றாக கழன்று விழுகிறது. பிறகு அது ஆட ஆரம்பிக்கிறது. அதை நீங்கள் கவனித்து சீர்படுத்தாமல் போனால், அது பெயர்ந்து விழுந்து விடுகிறது. இதனால் சில வேளைகளில் பெரிய ஆபத்தும் நேரிடுவதுண்டு.

ஒரு தேவபிள்ளையுடைய வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு முன்பாக, கொஞ்சம் கொஞ்சமாக ஆப்புகள் கழன்று விழுவதுபோல், ஜெப ஜீவியம் கழன்று போகிறது. வேத வாசிப்பு நின்று போகிறது. சபை கூடுதல் அசட்டை செய்யப்படுகிறது. பிறகு அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை, ஆட்டம் கண்டு விழுந்து போகிறான்.

சிம்சோன், சிற்றின்பச் சேற்றிலே விழுந்து போனான். பலமுறை அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எச்சரிக்கப்பட்டது. தெலீலாளின் மடியிலே படுத்துக் கிடந்த அவனை, ஒவ்வொருமுறையும் அவள் "இதோ பெலிஸ்தியர்கள் வந்து விட்டார்கள்" என்று சொல்லி சோதித்துக் கொண்டேயிருந்தாள். அவனுடைய தெய்வீக பெலன் ஆட்டம் கண்டது. முடிவிலே, அவன் விழுந்து போனான். அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டன, கைகளுக்கு விலங்கு போடப்பட்டது.

வேதம் சொல்லுகிறது, "பெலிஸ்தர் அவனைப்பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்" (நியா. 16:21).

தாவீதின் வீழ்ச்சிக்கு முன்பாக, பல சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன. யுத்தத்திற்குப் போக வேண்டிய நேரத்தில், தாவீது யுத்தத்திற்கு போகவில்லை. வேதத்தை வாசித்து, தியானிக்க வேண்டிய வேளையில், உப்பரிக்கையின் மேல் உலாவிக் கொண்டிருந்தார். கீழே குளித்துக் கொண்டிருந்த ஸ்திரீயை இச்சையோடு நோக்கிப் பார்த்தார். முடிவிலே பாவத்திற்குள் விழ வேண்டியதாயிற்று.

நீங்கள் விழுந்து போன நிலைமையிலிருக்கிறீர்களா? பின்மாற்றமான நிலைமையிலிருக்கிறீர்களா? நீங்கள் எந்த இடத்தில் விழுந்தீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் எபேசு சபையைப் பார்த்து, "ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக" (வெளி. 2:5) என்று சொன்னார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் விழுந்த இடத்திலேயே ஒருபோதும் கிடந்துவிடக் கூடாது. மரங்கள்தான் கீழே விழுந்தால், விழுந்த இடத்திலேயே கிடக்கும். ஆனால் நீங்கள் எழும்பி நிற்க வேண்டும். கர்த்தர் உங்களை எழுப்பி நிறுத்த வல்லவராயிருக்கிறார். நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்று வேதம் சொல்லுகிறது. எழுந்திருப்பீர்களா? பின்மாற்றத்திற்குள் சென்றுவிடாதபடி எழுந்திருப்பீர்களா?

நினைவிற்கு:- "அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப் பண்ணினான்" (2 இராஜா. 6:6).