என்ன வந்தது?

"மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக் குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?" (சங். 114:6).

மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போலவும், குன்றுகள் ஆட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளுகிறதற்கு என்ன வந்தது என்று ஆச்சரியத்தோடு தாவீது பார்க் கிறார். ஆம், கர்த்தர் உள்ளத்தில் வந்தார். துதியின் மகிழ்ச்சி ஆத்துமாவில் வந்தது. பரிசுத்த ஆவியின் நிறைவு இருதயத்தை பொங்கப் பண்ணியது. குன்றுகள் ஆட்டுக்குட்டியைப் போல துள்ளாமல், வேறு என்ன செய்யமுடியும்.

"சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" என்று சேராபீன்கள் துதித்தபோது, ஆலயத்தின் நிலைகள் அசைந்தது (ஏசா. 6:4). துதியின் சத்தம் ஜீவனற்ற நிலைக்கால்களை, கதவுகளை அசைக்குமானால், ஜீவனுள்ள ஏசாயாக்கள் அசையாமல் துள்ளாமல் இருப்பது எப்படி?

தன்னை உயர்த்திய கர்த்தருக்கு முன்பாக, தன்னைத் தாழ்த்தித் துதிக்க தாவீது ராஜா ஒருபோதும் வெட்கப்படவில்லை. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து கொண்டு, ஆசாரியர்கள் தாவீதின் நகரத்திற்குள் வந்தார்கள். "தாவீது சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்" (2 சாமு. 6:14).

தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாக, குதித்து நடனம் பண்ணுகிறதைக் கண்டு மீகாள் தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள். வேதம் சொல்லுகிறது, "கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாகப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்" (2 சாமு. 6:16).

மீகாளுக்கு துதியின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் பாக்கியமில்லாததால், எரிச்சலில், ராஜா ஏன் இப்படி துள்ளுகிறார், ஏன் தன் ராஜ வஸ்திரங்களை கழற்றிப் போட்டு சாதாரண மனுஷனைப் போல ஆடுகிறார் என்று தெரியாதது மட்டுமல்ல, அவள் துதிக்கத் தவறி, துதித்தவர்களையும் அவமதித்து, மரண பரியந்தம் அவளுக்கு பிள்ளையில்லாதிருந்தாள்.

ஏன் தாவீது துள்ளி நடனம் ஆடினார்? "என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்ளையிடும்படிக்குத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்" (2 சாமு. 6:21) என்றார்.

தேவபிள்ளைகளே, பாவச் சேற்றில் மூழ்கியிருந்த உங்களைத் தூக்கியெடுத்து தன்னுடைய கல்வாரி இரத்தத்தினால் கழுவி, சுத்திகரித்து, இரட்சிப்பின் சந்தோஷத்தினால் நிரப்பி, உங்களை ராஜாவாக ஆசாரியனாக மாற்றின தேவனை நீங்கள் துதித்து மகிமைப்படுத்துகிறீர்களா? தாவீதைப் போல் அவர் சமுகத்தை வாஞ்சித்துக் கதறுங்கள். தேவ சமுகத்தில் துள்ளிக் குதித்து, ஸ்தோத்தரித்து, துதித்து, ஆனந்த பரவசமடைய நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது பரலோக மகிமையை பூமியில் அனுபவிப்பீர்கள். தேவ பிரசன்னம் இனிமையாய் உங்களை மூடிக்கொள்ளும்.

நினைவிற்கு:- "என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்து போட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைக்கட்டினீர். என் தேவனாகிய கர்த்தாவே உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்" (சங். 30:11,12).