கசப்பான கனிகளா?

"அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?" (ஏசா. 5:4).

ஏசாயா 5-ம் அதிகாரத்திலே தீர்க்கதரிசி, "கர்த்தருக்கு செழிப்பான மேட்டிலே இருந்த ஒரு திராட்சத்தோட்டத்தைப் பற்றிய பாடல்" ஒன்றைப் பாடுகிறார். கர்த்தர் அந்த தோட்டத்துக்கு வேலியடைத்து, கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்ச செடிகளை நட்டு, அதின் நடுவிலே ஒரு கோபுரத்தையும் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல பழங்களைத் தரும் என்று காத்திருந்தார். ஆனால், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைத் தமக்கென்று தெரிந்துகொண்டார். ஆகவே, இஸ்ரவேல் என்னும் திராட்சச்செடியை கொண்டுவந்து, தம்முடைய தோட்டத் திலே நாட்டினார். ஒருவேளை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குத் தக்கதாக பன்னிரண்டு கிளைகளை அவர் நாட்டியிருந்திருக்கக்கூடும். வேதம் சொல்லுகிறது, "சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மன மகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே" (ஏசா. 5:7). ஆனால் அவர்கள் ஆண்டவருக்கு கசப்பான கனிகளைக் கொடுத்தது ஏன்?

ஒரு மாமரம் நல்ல கனிகளைக் கொடுத்து வந்தது. ஆனால், அது திடீரென்று கசப்பான கனிகளைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. காரணம், மாமரத்தைச் சுற்றிலும் வேப்ப மரங்களிருந்தன. இந்த வேப்பமரத்தின் வேர்களெல்லாம் மாமரத்தின் வேர்களோடு பின்னி பிணைந்திருந்தபடியினால், வேப்ப மரத்தின் கசப்பு மாமரத்துக்குள் வந்து விட்டது. கசப்பான மாராவின் தண்ணீர்களண்டையில் நிற்கும் எந்த மரமானாலும், அது கசப்பான கனிகளைத் தானே கொடுக்கும்.

கிராமங்களிலே பலர் தேனீக்களை வளர்ப்பதுண்டு. சில மாதங்களில், தேனிலே இனிமையோடு கூட ஒரு கசப்பும் கலந்திருக்கும். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங் கும் காலம் வரும்போது, தேனீக்கள் அதிலிருந்து கொண்டுவரும் தேன், மற்ற மரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தேனையும் கசப்பாக்கிவிடும். அப்படித்தான் இஸ்ரவேல் ஜனங்களும், கர்த்தருக்கு கசப்பான கனிகளைக் கொடுத்தார்கள்.

ஆனால், மனிதன் ஏன் கசப்பான கனிகளைக் கொடுக்கிறான் என்பதை அறிந்து, பாவமறியாத, பரிசுத்தமுள்ள, பரலோக தேவனுடைய செல்லப் பிள்ளையான கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து, நடப்பட்ட திராட்சச்செடியாக மாறினார். "நான் மெய்யான திராட்சைச் செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்" (யோவான் 15:1) என்றார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மெய்யான திராட்சச்சேடியாகிய கிறிஸ்துவிலே ஒட்டப்பட்டு, கிளைகளாக அவரிலே நிலைத்திருக்கவேண்டியது தான். அவரிலே நீங்கள் நிலைத்திருக்கும்போது, அவரோடு இணைந்து நிச்சயமாகவே நல்ல கனிகளைக் கொடுப்பீர்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் இஸ்ரவேலில் ஒட்டப்பட்ட கொடிகளல்ல. இயேசுகிறிஸ்துவில் ஒட்டப்பட்ட கொடிகள். செடியாகிய அவரிலிருந்து தெய்வீக சாறு, சுவை, பரிசுத்த மேன்மை உங்களுக்குள் கடந்து வருகிறது. நீங்கள் கிறிஸ்துவிலே நிலைத்து நின்று கர்த்தருக்கென்று நல்ல கனிகளைக் கொடுப்பீர்களா?

நினைவிற்கு:- "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்க மாட்டீர்கள்" (யோவான் 15:4).