யார் நமக்காக?

"கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான்" (மாற். 16:3).

யார் எனக்கு உதவி செய்வார், யார் தடைகளை நீக்கிப் போடுவார், யார் கல்லைப் புரட்டித் தள்ளுவார், என்று பிரச்சனைகளின் மத்தியிலே, உங்களுடைய உள்ளத்தில் பல கேள்விகள் எழும்புகின்றன. அன்றைக்கு மூன்று பெண்கள், இயேசுவை வைத்த கல்லறையண்டை வந்த பொழுது, அவர்களுக்கு புரட்டித் தள்ள முடியாத மாபெரும் கல்லைக் குறித்த எண்ணம் வந்தது. "ஐயோ, கல்லறையின் வாசலிலே பாராங்கல்லைப் போன்ற பெரிய கல் வைக்கப்பட்டிருக்குமே. இயேசுவின் சரீரத்திற்கு கந்தவர்க்கமிட வேண்டுமே. யார் இந்த கல்லைத் தள்ளுவார்கள்?" என்று எண்ணினார்கள்.

ஆனால் அருகில் வந்தபோதோ, அது புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள். கிறிஸ்துதான் அதை தள்ளிவிட்டு உயிருள்ளவராய், வல்லமையுள்ள வராய் எழுந்திருக்கக்கூடும். சிலர், தேவதூதர்கள் அந்தக் கல்லை புரட்டி தள்ளி இருந்திருக்கக்கூடும் என்று சொல்லுகிறார்கள்.

புரட்டி தள்ளப்பட வேண்டிய ஒரு கல் உண்டு. அந்த கல்தான் நிந்தை, அவமானம் என்கிற கல். இஸ்ரவேல் ஜனங்கள் முதல்முதலில் கில்காலிலே பாளையமிறங்கினார்கள். கில்கால் என்பதற்கு, "நிந்தை புரட்டப்பட்ட இடம்" என்பது அர்த்தமாகும். "அடிமைகள்" என்று அழைக்கப்பட்ட அவர்கள் கில்காலுக்கு வந்தபோது, பாலும் தேனும் ஓடுகிற கானானை ஆளுகிறவர்களாய் மாறினார்கள்.

நிந்தையாகிய கல் புரட்டித் தள்ளப்படும்பொழுது, அடிமையானவன் அரசனாக மாறுகிறான். தேவபிள்ளைகளே, ஒருவேளை நீங்கள், "யார் எனக்காக இந்த நிந்தையைப் புரட்டித் தள்ளுவார்கள்" என்று அங்கலாத்துக்கொண்டிருக்கலாம். இதோ, உயிர்த்தெழுந்த இயேசு உங்கள் பட்சத்தில் இருக்கிறார்.

புரட்டித் தள்ளப்படவேண்டிய இன்னொரு கல் உண்டு. அதுதான் ஆசீர்வாதத் திற்கு தடையாய் நிற்கிற கல். எரிகோ, இஸ்ரவேலருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. அங்கே இரும்புத் தாழ்ப்பாள்களும், வெண்கலக்கதவு களுமிருந்தன. "யார் எங்களுக்காக இந்தத் தடையை நீக்குவார்கள்?" என்று, இஸ்ரவேலர் அங்கலாய்த்திருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் துதியோடு சுற்றி வந்தபோது, எரிகோ கோட்டை நொறுங்கி விழுந்தது. வெண்கலக் கதவுகள் முறிந்தன. கர்த்தர் தடைகளை நீக்கிப்போட்டு, பாதையை உண்டு பண்ணினார்.

ஆம், கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவர். இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைத் தருகிறார். "தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்" (மீகா 2:13).

தேவபிள்ளைகளே, உங்களுக்காக கற்கள் புரட்டப்பட்டு தள்ளப்படுகின்றன. எரிகோவின் மதில்கள் நொறுங்கி விழுகின்றன. உங்களுக்கு எதிராக இருக்கிற தடைகளையெல்லாம் நீக்க கர்த்தர் உங்களுக்கு முன் செல்லுகிறார். ஆகவே சந்தோஷத்தோடு, "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" என்று சொல்லி ஸ்தோத்திரிப்பீர்களா? ஜெயகிறிஸ்து முன் சென்று, ஜெயமாக நடத்திடுவார்.

நினைவிற்கு:- "இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" (வெளி. 3:8).