ஏன் ஐசுவரியம்?

"உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக். 16:9).

நம் தேவன் ஐசுவரியசம்பன்னர். தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் கொடுக்கிறார். அவர் கொடுக்கும்போது, ஒரு நோக்கத்தோடு கொடுக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. உங்களு டைய சுய நன்மைக்காக, ஆடம்பரமாக உங்களுடைய செல்வப் பகட்டை பெருமையடித்துக்கொள்ளுவதற்காக அவர் ஐசுவரியம் கொடுப்பதில்லை. கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு.

"நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள் வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக். 16:9) என்று வேதம் சொல்லுகிறது. சாதாரணமாக, பணம் இருந்தால் அநேகர் வந்து உங்களோடு ஒட்டிக் கொள்ளுவார்கள், சிநேகம் பாராட்டுவார்கள். பல சிநேகிதர்கள், குடிக்கும், வெறிக்கும், உலக உல்லாசங்களுக்கும் அழைத்துச் செல்லுவார்கள். ஆனால் கர்த்தர் கூறும் சிநேகிதர்கள் அப்படிப்பட்டவர்களல்ல; அவர்கள் உங்களை நித்தியமான வீடுகளில் ஏற்றுக் கொள்ளும் சிநேகிதர்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய உலகப் பொருட்களை நீங்கள் சுவிசேஷத்திற்காகவும், ஆத்தும ஆதாயத்திற்காகவும் செலவழிக்கும்போது, உங்களுடைய செல்வம் அநேகரை பாதாளத்தின் வாசலிலிருந்தும், நரகத்தின் பிடியிலிருந்தும் மீட்டெடுக்கும். அவர்கள் ஒருபோதும் உங்களுடைய அன்பை மறந்து போவதில்லை. நீங்கள் ஊழியத்திற்காகச் செலவழிக்கிற பணம் ஆத்துமாக்களைக் கர்த்தரண்டை வழிநடத்தும். கிறிஸ்துவை அவர்களுக்கு சிநேகிதராக்கிவிடும்.

ஒருநாள் நீங்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும்போது, உங்கள் மூலமாய் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களெல்லாம் உங்களுடைய கைகளைப் பிடித்து, தங்களுடைய நித்திய வீடுகளுக்கு அழைத்துச் சென்று, அவைகளையெல் லாம் காண்பிப்பார்கள். ஆ! அந்த நாள் எத்தனை சந்தோஷமாயிருக்கும்.

அடுத்தது, கர்த்தர் உங்களுக்கு எதற்காக ஐசுவரியத்தைக் கொடுக்கிறார்? வேதம் சொல்லுகிறது, "இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்" (நீதி 17:17). ஆம், இடுக்கணின் வேதனைகளின் பிடியிலிருந்து மீட்கவுவே, கர்த்தர் ஐசுவரியத்தை உங்களுக்குத் தருகிறார்.

பாருங்கள்! குழியிலே போடப்பட்டு, எகிப்திலே அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பைக் கர்த்தர் ஆசீர்வதித்து, திரளான ஐசுவரியத்தைக் கொடுத்தார். முழு எகிப்துக்கும் பிரதம மந்திரி என்ற நிலைமைக்கு அவரை உயர்த்தினார். அந்த சூழ்நிலையில், தன் சகோதரர்களுக்கு யோசேப்பு எவ்வளவாய் உதவினார் என்று பாருங்கள்.

நீங்கள்தானே என்னைக் குழியிலே தூக்கிப்போட்டீர்கள் என்று பழி வாங்க எண்ணாமல், "ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே (எகிப்துக்கு) அனுப்பினார்" (ஆதி. 45:5) என்று பெருந்தன்மையுடன், தன் செல்வத்தைப் பகிர்ந்து கொண்டார். தேவபிள்ளைகளே, இடுக்கணில் இருக்கிற சகோதர, சகோதரிகளுக்கு மனப்பூர்வமாய் உதவுவீர்களா?

நினைவிற்கு:- "நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங் கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்" (மல். 3:10).