விரோதி யார்?

"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" (ரோமர் 8:31).

கர்த்தர் எப்போதும் உங்களோடிருக்கிறவர். கர்த்தர் உங்களோடிருக்கும்போது, உங்களுக்கு விரோதமாயிருப்பவன் யார்? தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும், "ஆண்டவரே நீர் என்னோடு இருப்பதற்காய் ஸ்தோத்திரம்; உம்முடைய பிரசன்னம் என்னோடிருப்பதற்காய், ஆயிரம் பதினாயிரம் தேவதூதர்கள் என்னோடிருப்பதற்காய் ஸ்தோத்திரம்" என்று சொல்லி, கர்த்தரை ஸ்தோத்தரிப்பீர்களா?

"நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னை கைவிடுகிறதுமில்லை" என்று கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிறார். நீங்களும் எப்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தை வாஞ்சியுங்கள். கர்த்தருடைய நாமத்தினால் இரண்டுபேர், மூன்றுபேர் கூடும்போது, கர்த்தர் அங்கே வந்துவிடுவார். அவரை துதிக்க ஆரம்பிக்கும்போது, துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிறவர் அங்கே வந்து விடுவார்.

கர்த்தருடைய நோக்கமே, அவர் உங்களோடு இருக்க வேண்டுமென்பதுதான். அதற்காகதான் உங்களை தம்முடைய சாயலிலே, ரூபத்திலே சிருஷ்டித்தார். பகலின் குளிர்ச்சியான வேளைகளிலெல்லாம் மனுமக்களைத் தேடி வந்தார். ஆபிரகாமை தன்னுடைய சிநேகிதன் என்று அழைத்து, ஆபிரகாமோடு பேசினார். மோசேயோடு முகமுகமாய் பேசினார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை வாஞ்சிப்பீர்களா? கர்த்தரோடு இருக்க பிரியப்படுவீர்களா? வேதம் சொல்லுகிறது, "நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்" (2 நாளா. 15:2).

நீங்கள் ஒருபோதும் கர்த்தரை துக்கப்படுத்தி விடக்கூடாது. உங்களை ஆசீர் வதித்து உயர்த்துகிற தேவனை வேதனைப்படுத்தக்கூடாது. நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்று கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைப் பார்த்து தான் சொல்லுகிறாரே தவிர, குடிகாரர்களையும், வேசிக்கள்ளர்களையும், மாம்சீகத்தில் வாழுகிறவர்களையும் பார்த்து சொல்லவில்லை. மனம் போல வாழ்பவர்களோடு கர்த்தர் இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தினால், கர்த்தர் விலகி விடுவார். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாததினாலே, சவுலை விட்டு விலகினார்.

கர்த்தர் உங்களோடிருந்தால் உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஆவியானவர் உங்களோடிருந்தால் வெற்றி வாழ்க்கையாய் மாறும். மாத்திரமல்ல, ஆவியானவர் அருமையாய் உங்களை நடத்திக் கொண்டு போவார். நீங்கள் ஒரு சைக்கிளில் போவீர்களென்றால், கொஞ்சம் முயன்றால் போதும். சைக்கிள் உங்களை அருமையாய் அழைத்துச் செல்லும். நடந்து களைத்து போவதை விட, சைக்கிளில் செல்லுவது எளிதாயிருக்கும். அதுபோல ஆவியானவருடைய துணையோடு, வெற்றி வாழ்க்கைச் செய்வது எளிதாக அமையும்.

யோசேப்பைப் பாருங்கள்! கர்த்தர் அவரோடு இருந்ததினால், எவ்வளவு அதிகமாய் உயர்த்தப்பட்டார்! தன்னுடைய சொந்த முயற்சியினால் அந்த அளவு அவரால் உயர்ந்திருக்கவே முடியாது. ஆவியானவர் கூட இருந்ததினால் ஆவிக்குரிய வரங்கள் அவருடைய வாழ்க்கையில் கிரியை செய்தது. அவர் செய்த எல்லாவற்றையும் கர்த்தர் வாக்கப்பண்ணினார். தேவபிள்ளைகளே, அப்படியே கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாக்கும்" (சங். 1:3).