பிரிப்பவன் யார்?

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" (ரோமர் 8:36).

ரோமர் 8-ம் அதிகாரத்தில் அப்.பவுல், மிகுந்த சவாலோடு யார், யார், யார், யார், என்று நான்கு கேள்விகளைக் கேட்கிறார். தேவன் நம்முடைய பட்சத் திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார், தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார், என்று எழுதிவிட்டு, முடிவாக கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார், என்று கேட்கிறார்.

கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்க முயற்சிக்கிற காரியங்கள் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ, என்று வரிசை போட்டுக்கொண்டே போகிறார். இந்த காரியங்கள் மாத்திரமல்ல. இதைவிட அதிகமான காரியங்களிருந்தாலும், அவை ஒன்றினாலும் தேவனுடைய அன்பைவிட்டு உங்களை ஒருபோதும் பிரிக்கவே முடியாது.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களெல்லாம் தேவனை நேசித்து, அன்பு செலுத்தி அந்த நேசத்திலே உறுதியாய் நின்றார்கள் என்கிறபோது, புதிய ஏற்பாட்டிலே கல்வாரி அன்பை ருசிக்க, நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகமாய் கர்த்தரில் அன்பு கூரவேண்டும்! ஏனென்றால், இயேசு சிலுவையிலே தன்னுடைய ஜீவனைக் கொடுத்து, உங்கள்மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தினார்.

அந்த நேசத்தின் உச்சிதத்தினால் உங்களுக்காகப் பிழியப்பட்டார். அவருடைய சரீரமெல்லாம் உழப்பட்ட நிலம்போல மாறினது. அதற்காக நீங்கள் அவரை நேசிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள். "ஆண்டவரே, எந்த சூழ்நிலையிலும் நான் உம்மை நேசிப்பேன். எனக்கு ஆசீர்வாதம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அந்த கல்வாரி அன்பினிமித்தம் நான் உம்மை நேசிப்பேன்" என்று நேசிப்பீர்களா?

ஒருமுறை ஒரு விசுவாசி தேவ ஊழியரிடம் வந்து, "ஐயா, யோபுக்கு இல்லாத ஒரு உபத்திரவம் எனக்கு இருக்கிறது. நான் என்ன செய்வது?" என்று கேட்டார். போதகருக்கு அது ஆச்சரியமாயிருந்தது. "யோபுக்கு இல்லாத என்ன உபத்திரவம் உனக்கு இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு அந்த விசுவாசி, "யோபுக்கு இல்லாத ஒரு உபத்திரவம் கடன்தொல்லை. என்னை அந்த கடன் தொல்லை வாட்டுகிறது" என்றார்.

அதற்கு அந்தப் போதகர், "அந்த கடனுள்ள சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்க கற்றுக்கொள். கர்த்தர்மேல் அன்பு வைக்க தீர்மானம் செய். கர்த்தர் அந்த கடன் பிரச்சனையை மாற்றுவார்" என்றார். ஆம், வெள்ளியும், பொன்னும் கர்த்தருடையது. வானமும், பூமியும் கர்த்தருடையது.

யோபுவின் பிற்காலத்தை கர்த்தர் ஆசீர்வதிக்க சித்தமானபோது, அவருடைய நண்பர்களின் உள்ளங்களில் கர்த்தர் ஏவினார். அவருக்கு அறிமுகமான அனைவரும் அவரிடத்தில் வந்து, அவரவர் ஒவ்வொரு தங்கக் காசையும், ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது (யோபு 42:11). கர்த்தர் யோபுவை இரண்டத்தனையாய் ஆசீர்வதித்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனிடத்தில் அன்பு கூரும்போது, கர்த்தர் இவ்விதமாகவே ஆச்சரியமாக உங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பார். உங்கள் கடன் பிரச்சனைகள் யாவும் மாறிப்போகும்.

நினைவிற்கு:- "நேசம் மரணத்தைப்போல் வலிது; திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (உன். 8:6,7).