அநியாயமா? அநீதியா?

"நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது" (பிர. 3:16).

உங்களுடைய நியாயம் புரட்டப்படும்போதும், அநேகர் உங்கள்மேல் அநியாய மாய் குற்றஞ்சாட்டும்போதும் உங்கள் உள்ளம் தேம்புகிறது. இருதயம் வேதனைப் படுகிறது. நீங்கள் சோர்வடைந்து போகிறீர்கள்.

இயேசு கிறிஸ்துவின்மேல் அநேகர் அநியாயமாய் குற்றம் சாட்டினார்கள். அவர் நீதி புரட்டப்பட்டது. அவர் மேல் சுமத்திய முதல் குற்றச்சாட்டு, "தேவனுடைய ஆலயத்தை இடித்துப் போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான்" (மத். 26:61) என்பதாகும்.

ஆனால், ஆலயத்தை நான் இடித்துப் போடுவேன் என்று அவர் சொல்லவில்லை. நீங்கள் இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள் அதை எழுப்புவேன் என்றுதான் சொன்னார் (யோவான் 2:19). ஆனால், யூதர்கள் வார்த்தைகளைப் புரட்டினார்கள். இன்றைக்கும் அநேகர் உங்களுடைய வார்த்தைகளைப் புரட்டி, அநியாயமாய் குற்றஞ்சாட்டக் காத்துக் கொண்டிருப் பார்கள். அந்த வேளைகளிலெல்லாம் இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

இரண்டாவது குற்றச்சாட்டு, இயேசு தம்மை தேவனுடைய குமாரன் என்று சொன்னார் என்பதாகும். பிரதான ஆசாரியனாகிய காய்பா இயேசுவைப் பார்த்து, "நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?" என்று கேட்டார். அதற்கு இயேசு; "நீர் சொன்னபடிதான்" (மத். 26:63,64) என்றார்.

காய்பா ஒரு நீதியான விசாரணை நடத்துவதாயிருந்தால், எதிர்தரப்பு ஜனங்களைப் பார்த்து, அவர் தேவனுடைய குமாரன் இல்லை என்று நிரூபிக்கச் சொல்லியிருக்க வேண்டும். இயேசு குருடனின் கண்களை திறந்து, குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கி, மரித்தோரை எழுப்பி, தான் தேவ குமாரன் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

மூன்றாவதாக, இயேசு தன்னை ராஜா என்று சொன்னார் என்று அவருக்கு விரோதமாப் பேசினார்கள். அதற்கு இயேசு, "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரிய தானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே" (யோவான் 18:36) என்றார்.

தேவபிள்ளைகளே, இன்று மனச்சாட்சியில்லாமல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் ஏராளமாய் எழும்பியிருக்கிறார்கள். கலங்காதிருங்கள். உங்களுக்கு விரோதமாய் இழைக்கப்படுகிற ஒவ்வொரு அநியாயத்தையும் கர்த்தருடைய கண்கள் காண் கின்றன. யார் உங்களுக்கு எதிர்நின்றாலும், கர்த்தர் உங்களுடைய பட்சத்தில் நிற்கிறார் என்பதை நீங்கள் மறந்து போகாதிருங்கள்.

மனுஷர் அநியாயமாய் குற்றஞ்சாட்டலாம். ஆனால் கர்த்தரோ, உங்களுக்கு நீதி செய்வார். வேதம் சொல்லுகிறது, "சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப் பாரோ" (ஆதி. 18:25). நீங்கள் இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொண்டு ஜெபியுங்கள். நீதியின் மேல் பிரியப்படுகிற கர்த்தர், நிச்சயமாய் உங்களுக்கு நீதி செய்வார். அவர் நீதியின் தேவனாய், நீதியின் சூரியனாய், நீதியின் ராஜாவாய் உங்களோடிருக்கிறார்.

நினைவிற்கு:- "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்" (மத். 5:11,12).