பின் செல்லுவாயா?

"ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது" (யோவா. 10:4).

"என்னைப் பின்பற்றி வா" என்று அழைக்கிறவர், உங்களுக்கு முன்னே செல்லுகிறார். உங்களுக்கு வழிகாட்டுகிறார். கோணலானவைகளை அகற்றுகிறார். தடைகளை நீக்குகிறார். நல்ல மேப்பன் முன் செல்லும்போது, ஆடுகள் உற்சாக மாய் பின்னே செல்லுகின்றன.

பாவ அடிமைத்தனத்தை விட்டு வெளியே வந்த நீங்கள், கிறிஸ்துவை உங்கள் மேய்ப்பராய் கொண்டிருக்கிறீர்கள். அவரை நீங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். வேதத்தில் சிறந்த மேய்ப்பர்கள் எல்லோரும், சிறந்த ஆடுகளாகவே விளங்கினார்கள். ஆபிரகாம் சிறந்த மேய்ப்பன். அவர் கர்த்தரை ஒரு ஆட்டைப் போல பின்பற்றினார். ஆபிரகாம் தன் தேசத்தையும், இனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டு கர்த்தரைப் பின்பற்றினார் (ஆதி. 12:1-3).

ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்ற முற்பிதாக்களெல்லாம் மேய்ப்பர்கள் தான். ஆடுகளை மேய்த்த தாவீதும் ஒரு மேய்ப்பன். அவர் கர்த்தரை மேய்ப்பனாகக் கொண்டு, 23-ம் சங்கீதத்தை எழுதினார். கர்த்தரை மேய்ப்பனாகக் கொண்டபடியினால், கர்த்தர் இஸ்ரவேலின் மீது தாவீதை மேய்ப்பனாக்கி, ஆளுகை கொடுத்தார். நீங்களும் நல்ல ஆடுகளாய் கர்த்தரைப் பின்பற்றும்போது, உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுவீர்கள்.

எலிசாவின் மேல் சால்வை விழுந்தபோது, தன் தகப்பனையும், தன் திரண்ட ஆஸ்தியையும் விட்டுவிட்டு எலியாவையும் கர்த்தரையும் எலிசா பின்பற்றினார். அப். பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் நமக்கு முன்மாதிரியானதினாலே அவர் தைரியமாய் எழுதுகிறார். "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1 கொரி. 11:1).

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றும்போது பிதாவானவர் உங்களை கனம்பண்ணுவார். ஆசீர்வாதங்கள் உங்களைப் பின்தொடரும். "ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்" (யோவா. 12:26).

இயேசுகிறிஸ்து, "மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமை யுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 19:28) என்றார்.

தேவபிள்ளைகளே, இயேசுவைப் பின்பற்றுவது ஒரு பாக்கியமான அனுபவ மாகும். கர்த்தருடைய உபதேசங்களும், கட்டளைகளும் உங்களுக்குப் பாரமானவைகளல்ல. அவரில் அன்புகூருகிற உங்களுக்கு அவரைப் பின்பற்றுவது உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் கொண்டு வரும். பின்பற்றும்போது வரக்கூடிய சிறுசிறு பாடுகளை பொருட்படுத்தாதிருங்கள். ஏனென்றால், இக்காலத்துப்பாடுகள் இனி உங்களில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகள் அல்ல.

நினைவிற்கு:- "ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை" (2 பேதுரு 1:10).