தாழ்மையின் மேன்மை!

"தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, நான் யாக்கோபோடே பண்ணின என் உடன் படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்" (லேவி. 26:41,42).

கர்த்தர் தாழ்மையுள்ளவர்களுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை வைத்திருக் கிறார். "தாழ்த்தினால்" என் உடன்படிக்கையை நினைப்பேன், ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உடன்படிக்கை என்றால், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளும், வாக்குத்தத்தங்களுமாகும். கர்த்தர் உங்கள் முற் பிதாக்களோடு உடன்படிக்கை செய்யும்போது, என்னென்ன வாக்குத்தத்தங்களை கொடுத்தாரோ, அவைகளை உங்களைத் தாழ்த்தும்போது உங்களுக்கும் தந்தருளுவார்.

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்" (2 நாளா. 7:14) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களைத் தாழ்த்த ஒருபோதும் தயங்கக் கூடாது. நான் இரட்சிக்கப்பட்டேன், அபிஷேகம் பெற்றுவிட்டேன், சீயோன் பயணம் செல்கிறேன், என்று பெருமையாக எண்ணிக்கொண்டு மற்றவர்களைத் தாழ்வாக தள்ளிவிடக் கூடாது. ஜாதிப் பெருமைகளோ, சபைப் பெருமைகளோ உங்களை வந்து மேட்டிமைக்குள் வழி நடத்திவிடக்கூடாது.

தானியேலைப் பாருங்கள்! "என் தேச மக்கள் பாவம் செய்தார்கள்" என்று அவர் சொல்லவில்லை. தன்னையும், தன் ஜனங்களையும் இணைத்துக்கொண்டு, "நாங்கள் பாவம் செய்து துன்மார்க்கமாய் நடந்தோம். நாங்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமல் போனோம்" என்று சொல்லி, தன்னை தாழ்த்தி ஜெபித்தார்.

தானியேல் பரிசுத்த ஆவியின் வல்லமை பெற்றவர் (தானி. 6:3). "கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர்" (தானி. 9:23). சொப்பனங்களையும், தரிசனங்களையும் காண்கிறவர். மாத்திரமல்ல, அவைகளின் அர்த்தங்களையும் விவரிக்கக் கூடியவர். தேவனோடு இவ்வளவு அனுபவம் பெற்ற தானியேல், தேவனுக்கு முன்பாக தன்னை எப்படித் தாழ்த்தினார் என்பதைப் பாருங்கள். தன்னையும் தன்னோடுள்ள இஸ்ரவேலரையும் இணைத்துக்கொண்டு, எங்களை மன்னியும் "நாங்கள் பாவம் செய்தோம்" (தானி. 9:15) என்று கெஞ்சி ஜெபிக்கிறார்.

நெகேமியா, "இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்" என்று தன்னை தாழ்த்தி, தன் ஜனங்களோடு இணைந்து ஜெபித்தார் (நெகே. 1:6,7).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சமுகத்திலே உங்களைத் தாழ்த்தி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். நீங்கள் உங்களைத் தாழ்த்தி ஜெபிக்கும்போது, கர்த்தர் முற்பிதாக்களோடு செய்த எல்லா உடன்படிக்கைகளையும் நினைவுகூருவார். அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்கு நிறைவேற்றித் தருவார்.

நினைவிற்கு:- "இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட் டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்" (1 நாளா. 17:23).