தாயைப் போல!

"ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" (ஏசாயா 66:13).

இந்த வசனத்தை நீங்கள் எத்தனைமுறை வாசித்தாலும், இதிலுள்ள இனிமை யும், ஆறுதலும் குறைவதேயில்லை. தாயினும் மேலாய் உங்களை நேசிக்கிற கர்த்தர், தாய் தேற்றுவதைப் போல உங்களைத் தேற்றுகிறார்.

கர்ப்பவதியாயிருந்த ஒரு சகோதரி, வேலையினிமித்தம் வெளித்தேசத்திற்கு சென்றார்கள். அவர்கள் குடும்பத்தார் அனைவரும் இந்தியாவில் இருந்ததால், அவர்களது பிரசவ நேரத்தில், உதவியாக, ஒத்தாசையாக இருக்க அங்கு ஒருவருமில்லை. அவர்கள், "நான் தாயின் அன்புக்காக மிகவும் ஏங்கினேன். ஒரு அனாதையைப் போல, பிரசவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். ஆனாலும், கர்த்தர் என்னை ஒரு தாய் தேற்றுவதைப்போலத் தேற்றி, பெலப்படுத்தி, தைரியப்படுத்தி, நல்ல சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டார்" என்று சொன்னார்கள்.

தேவபிள்ளைகளே, எனக்கு அன்பு செலுத்த என் தாய் என் அருகில் இல்லையே என்றும், ஆதரவற்ற அனாதையைப் போல இருக்கிறேன் என்றும், ஏங்கிக் கலங்கு கிறீர்களா? இன்று கர்த்தர் உங்கள் அருகில் வந்து, தம்முடைய கைகளை உங்கள்மேல் அன்போடு வைத்து, "மகனே, மகளே, நான் உன்னோடுகூட இருக்கிறேன். தாய் தேற்றுவதுபோல் நான் உன்னைத் தேற்றுவேன்" என்று சொல்லுகிறார்.

உலகப்பிரகாரமான தாய், எல்லா வேளையிலும் பிள்ளைகளுக்கு ஆதரவாய் இருக்க முடிவதில்லை. நேரமும், தூரமும், காலமும் தாயின் அன்பை மட்டுப் படுத்துகின்றன. ஆகாரைப் பாருங்கள்! அவள் அன்புள்ள தாய்தான்; வனாந்தர வழிப் பிரயாணத்திலே, அவள் கொண்டு சென்ற துருத்தி தண்ணீர் தீர்ந்து விட்டது. அவளுடைய பிள்ளை தாகத்தால் கதறிக் கதறி அழுதது. ஆகாரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. வனாந்தரத்தில், அவள் தண்ணீருக்கு எங்கே போவாள்? தாகத்தால் தவிக்கிற பிள்ளையின் அழுகுரலுக்கு என்ன பதிலளிப்பாள்? எவ்வளவுதான் தேற்றினாலும், அந்தப் பிள்ளையின் தாகத்தை தணித்துவிட முடியுமா?

அந்த வேளையிலே அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து, "ஆண்டவரே, நீர் ஏதாவது ஒரு வழியைத் திறந்து, என் குழந்தையைக் காப்பாற்றும்" என்று கதறி அழுதிருந்திருப்பாள். ஆகார் சத்தமிட்டு அழுதாள் என்று வேதம் சொல்லுகிறது. தாயினும் மேலான அன்புள்ள கர்த்தர், அவளுடைய அழுகுரலைக் கேட்டார். வனாந்திரத்திலே தண்ணீரூற்றைத் தோன்றும்படிச் செய்தார். அவர் தேற்றுகிறது மாத்திரமல்ல, உங்களுடைய தேவைகளை சந்திக்கிறவராகவுமிருக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங் காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப் பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது" (ஏசாயா 49:15,16).

தேவபிள்ளைகளே, தகப்பனும் தாயும் கைவிட்டாலும், கர்த்தர் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டார். உங்களுடைய துன்ப வேளையிலும், தனிமையின் வேளையிலும், புயலும், கடுங்காற்றும் உங்கள்மேல் மோதுகிற வேளையிலும் கர்த்தர் உங்களோடிருப்பார். உங்களைத் தேற்றுவார்.

நினைவிற்கு:- "தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" (ஏசாயா 46:3,4).