தாழ்வும், உயர்வும் !

"தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (லூக். 14:11).

கர்த்தர் முதலாவது, மனந்திரும்பி தன்னண்டை வருகிறவர்களை உயர்த்துகிறார். இரண்டாவது, தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார். தாழ்மை ஒரு சிறந்த அணிகலனாகும். தாழ்மையை கர்த்தர் விரும்புகிறார், நேசிக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது" (மத். 5:3). உலகப்பிரகாரமாக மாத்திரமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாகவும் நீங்கள் எளிமையுள்ளவர்களாய் வாழவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். பெரிய பெரிய பாவம் செய்து விழுந்தவர்களைப் பார்க்கிலும், ஆவிக்குரிய பெருமையினால் விழுந்தவர்களே மிக அதிகம்.

கர்த்தர் உங்களை நேசித்து, அன்பு செலுத்தி, வரமும், வல்லமையும் கொடுக்கும் போது, நீங்கள் ஒருபோதும் பெருமையடைந்துவிடக்கூடாது. ஆவிக்குரிய பெருமையடைகிறவர்கள் குறைசோல்லுகிற ஆவியினால் பீடிக்கப்பட்டு, மற்றவர்களை குற்றஞ்சாட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால், தாழ்மையுள்ளவர்கள் கர்த்தருடைய கிருபையிலே சார்ந்து உயர்த்தப்படுகிறார்கள்.

ஒருமுறை ஒரு வாலிபன், "கர்த்தர் ஆவிக்குரிய வரங்கள் அத்தனையையும் எனக்குக் கொடுத்திருக்கிறார். எங்கேயாவது பில்லிசூனியம் இருக்கிறதா? நான் வந்து, அந்த சூனியங்களையெல்லாம் சுட்டெரிக்கிறேன். எங்கேயாவது மந்திரவாதிகள் இருக்கிறார்களா? ஜெபம் பண்ணி, அந்த மந்திரவாதிகளை நான் அழித்து விடுவேன்" என்றெல்லாம் பேசினான். ஆனால், கூட்டத்தின் முடிவில் ஊழியர் அவனுக்காக ஜெபித்தபோது, அவன் ஆடிக்கொண்டு தொப்பென்று கீழே விழுந்தான். அவனுக்குள்ளிருந்த பெருமையைப் பார்த்து, சாத்தான் அவனுக்குள் புகுந்துவிட்டான். எத்தனை பரிதாபம்!

ஒருவிசை பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபித்தபோது, பரிசேயனுடைய ஜெபமெல்லாம் பெருமையாக, சுயவிளம்பரமாக அமைந்திருந்தது. ஆனால் ஆயக்காரனோ, தன்னுடைய கண்களைக்கூட வானத்திற்கு ஏறெடுக்க துணியாமல், "ஆண்டரே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்" என்று சோல்லி ஜெபித்தான். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டார். அவனை நீதிமானாக்கினார், உயர்த்தினார்.

இயேசு சொன்னார், "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" (மத். 11:29). இயேசுவின் தாழ்மையைக் கண்டு, பிதா அவரை உயர்த்தினார்.

வேதம் சொல்லுகிறது, "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதா வாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலி. 2:9,10,11).

தேவபிள்ளைகளே, விசுவாசிகளுக்கும், ஊழியக்காரர்களுக்கும் முன்பாக தாழ்மையும், அன்புமுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள். உங்களிலும் மற்றவர் களை மேன்மையாய் எண்ணுங்கள். கனம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நினைவிற்கு:- "இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்" (சகரியா 9:9).