தேவ சாயலாக!

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்" (ஆதி. 1:27).

கர்த்தர் மனுஷனை உருவாக்கும் முன்பே, அவனைக் குறித்து விசேஷமான நோக்கம் கொண்டிருந்தார். ஆகவேதான், அவருடைய அநாதி தீர்மானத்தின்படி, அவருடைய சாயலாகவும், ரூபத்தின்படியும் மனுஷனை சிருஷ்டித்தார். அவருடைய அன்பினால், ஜீவ சுவாசத்தையே அவன்மேல் ஊதினார். மனுஷனைக்குறித்து அவர் வைத்திருக்கிற விசேஷமான தீர்மானங்கள் எத்தனை உயர்வானவை!

ஒருநாள் ஒரு பக்தன் ஜெபத்தோடு அதிகாலைவேளை ஒரு ரோட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, தரையிலே ஒரு நாணயம் கிடக்கிறதைக் கண்டெடுத்தார். அந்த நாணயம் வளைந்து, நெளிந்து போயிருந்தது. எத்தனையோ கார்களும், பஸ்களும் அதன்மேல் ஏறிச் சென்றிருந்திருக்கக்கூடும். ஆனாலும் அதன் மேலுள்ள அரசாங்க முத்திரை அழியவில்லை. அதை கடையில் கொண்டுபோய் கொடுத்தால், நிச்சயமாகவே அதன் மதிப்புக்குரிய பொருளைக் கொடுப்பார்கள்.

அந்த நாணயத்தை பக்தன் பார்த்துக்கொண்டேயிருந்தபோது, கர்த்தர் மெல்லிய குரலிலே அந்த பக்தனோடு பேசினார். "மகனே, புதிய நாணயத்திற்கு என்ன மதிப்பு உண்டோ, அதே மதிப்பு அடிபட்டு, நெளிந்திருக்கிற இந்த நாணயத்திற்கும் உண்டு. காரணம், இந்த நாணயத்தில் அரசாங்க முத்திரையிருக்கிறது. அது போலவே, என்னுடைய சாயலிலே உருவாக்கப்பட்ட என் ஜனங்கள், தங்கள் பாவத்தின் விளைவாகவும், சாபத்தின் விளைவாகவும், சத்துருவினுடைய போராட்டத்தின் விளைவாகவும், நெளிந்து வளைந்திருந்தாலும், தேவனுடைய சாயல் அவர்கள் மேல் இருக்கிறது" என்றார்.

தேவபிள்ளைகளே, கர்த்தரை அன்போடு நோக்கிப் பார்த்து, "நான் தேவ சாயலாக உருவாக்கப்பட்டவன். கர்த்தர் என்னை விசேஷமுள்ளவனாகவும், மேன்மையுள்ளவனாகவும் நினைத்திருக்கிறார். அவருடைய கண்களில் எனக்கு தயவு கிடைத்திருக்கிறது. அவர் என்னை நேசித்து அன்பு செலுத்துகிறார். நான் அவருடையவன். அவர் என்னுடையவர். ஆகவே, நான் கர்த்தரைப் பிரியப்படுத்தி அவருக்காகவே முற்றிலுமாய் வாழ்வேன்" என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள்.

பாவத்தினால் வளைந்து, நெளிந்து உருக்குலைந்துபோயிருந்த மனுக்குலத்தை மீண்டும் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தவே இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். அதற்காக அவர் தன்னையே உருக்குலைந்தவராக, கல்வாரி சிலுவையிலே அர்ப்பணித்தார். மனிதன் இழந்துபோனதையெல்லாம், அவனுக்குத் திரும்பப் பெற்றுத் தரும்படி சித்தங்கொண்டார்.

வேதம் சொல்லுகிறது: "மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வை யும், மனுப்புத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்" (ஏசா. 52:14).

தேவபிள்ளைகளே, உடைந்து நொறுங்கிக் கிடக்கும் உங்கள் வாழ்க்கையை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை திரும்ப வனைவார். மேன்மையுள்ள, கனத்திற்குரிய, தேவன் பயன்படுத்தும் விசேஷ பாத்திரமாய் மாற்றுவார். தேவசாயல் உங்களில் பிரகாசிக்கும்.

நினைவிற்கு:- "வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்" (ஏசா. 35:1).