தேவ ஐக்கியம்!

"பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்" (ஆதி. 3:8).

கர்த்தர், ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களில் மிக மேன்மையான ஆசீர்வாதம், தேவனோடுள்ள ஐக்கியமாகும். ஒவ்வொருநாளும் பகலின் குளிர்ச்சி யான வேளையிலே, கர்த்தர் ஏதேனிலே உலாவினார். மனிதனோடு ஐக்கியமாயிருக்கும்படியாக, அவனிடத்தில் பேசும்படியாக இறங்கி வந்தார். அவர் இறங்கி வரும் போதே, பகலின் உஷ்ணம் மறைந்து, அவரது ஐக்கியத்தில் அங்கே குளிர்ச்சி உண்டானது.

தேவபிள்ளைகளே, நீங்களும் கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தை உணரும் போது, ஒரு சந்தோஷமான குளிர்ச்சி, சோதனை வேளையிலே ஆறுதலான குளிர்ச்சி, போராட்டத்தின் மத்தியிலே, சமாதானமான குளிர்ச்சி உண்டாகும். நீங்கள் தேவனோடு உலாவுவீர்களென்றால், பகலின் குளிர்ச்சியை அனுபவிப்பீர்கள்.

ஆதாம், ஏவாள் கர்த்தரோடு ஐக்கியம் கொண்டிருந்தார்கள். கர்த்தர் தன் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமாயிருந்த மனிதனிடத்தில் ஐக்கியமாயிருந்தார். எல்லா மிருக ஜீவன்களுக்கும் பெயரிட்டு அவனிடம் ஐக்கியமாயிருந்தார். ஆனால் மனிதன் பாவம் செய்தபோது, அந்த ஐக்கியத்தை இழந்துபோனான்.

மிருக ஜீவன்கள், ஆதாம் ஏவாளுக்கு கீழ்ப்படிய மறுத்தன. மனிதனும், மனுஷியும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்ட ஆரம்பித்தார்கள். தேவனோடுள்ள ஐக்கியம் முற்றிலும் முறிவுபட்டுப் போனது. கர்த்தர் உலாவ வந்தபோது, அவன் மரங்களுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டான். பயம் உள்ளத்தைப் பிடித்தது.

தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலமாகத்தான், அந்த ஐக்கியத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, "ஆண்டவரே, நான் உம்மைத் துக்கப்படுத்தினேனே, வேதனைப்படுத்தினேனே, உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும், உம்மோடு சமாதானமாக ஒப்புரவாகி வாழ விரும்புகிறேன்" என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அப். பவுல், "இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புர வாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். ஆனபடி யினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்" (2 கொரி. 5:18,20) என்றார்.

ஒப்புரவாகுதலை முதலில் ஆரம்பித்தது, கர்த்தர்தான். ஆதாம் பாவம் செய்து ஒளிந்து கொண்டிருந்தபோது, கர்த்தர்தான் ஆதாமைத் தேடி வந்து, "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று அன்போடு விசாரித்தார். பாருங்கள்! மனுஷனை அவர் நினைப்பதற்கும், அவனை விசாரிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?

விழுந்துபோன, கீழ்ப்படியாத, சர்ப்பத்துக்குக் கீழ்ப்படிந்து கர்த்தருக்கு துரோகம் செய்த மனிதனை அவர் அன்போடு விசாரித்து, ஒப்புரவாகி ஐக்கியம் கொள்ள வருகிறாரென்றால், இதைப் பார்க்கிலும் தேவ அன்புக்கு வேறு என்ன உதாரணம் தேவை? தேவபிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்கு கொடுக்கிற இந்த ஐக்கியத்தை இப்பொழுதே நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது" (1 யோவா. 1:3).