தேவ ஆசீர்வாதம்!

"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதி. 12:2).

கர்த்தர் உங்களுக்கு இம்மைக்குரிய ஆசீர்வாதத்தையும், ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் தருகிறார். அதே நேரத்தில் நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் தருகிறார். ஏனென்றால், நீங்கள் கர்த்தரையே தஞ்சமாகவும் கொண்டிருக்கிறீர்கள்.

அநேகர் தவறாக, "பொருளாதார ஆசீர்வாதம் இருக்குமென்றால் பரிசுத்தமாய் வாழமுடியாது. தரித்திரத்தில் பிறந்தோமானால் பொன்னைப் போல சுத்திகரிக்கப் படுவோம்" என்று எண்ணுகிறார்கள். ஆனால், கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்ந்த ஆபிரகாம், தாவீது, யோபு என்பவர்கள் ஐசுவரியவான்களாய் விளங்கினார்கள். யோசேப்பையும், தானியேலையும் கர்த்தர் சாதாரண நிலைமையில் வைக்க வில்லை. ராஜ்யங்களை ஆளுகிறவர்களாக உயர்த்தினார்.

யோபுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடு களும், ஐந்நூறு கழுதைகளும் இன்னும் ஏராளமான பணிவிடைக்காரர்களும் இருந்தாலும், அவர் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளவில்லையா?

யோபுவின் ஆஸ்திகளையெல்லாம் அழித்துப்போட கர்த்தரிடத்தில் சாத்தான் அனுமதி வாங்கினாலும், கர்த்தரோ அவருடைய சிறையிருப்பை மாற்றி இரண்டு மடங்காக ஆசீர்வதித்தார். யோபுவின் முன்னிலைமையைக் காட்டிலும் பின்னிலைமை ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததினால் யோபு இன்னும் பலத்த ஐசுவரிய வானாகவும், செல்வந்தனாகவும் வாழ்ந்திருக்க வேண்டும் (யோபு 42:10-12).

கர்த்தர் பொருளாதார ஆசீர்வாதத்தை விரும்பாதவராயிருந்தால், ஆபிரகாமை அவ்வளவு மேன்மைப்படுத்தியிருந்திருக்க மாட்டார். தரித்திரத்திலே விட்டு வைத்திருந்திருப்பார். மட்டுமல்ல, இஸ்ரவேல் ஜனங்களுக்கு பாலும் தேனும் ஓடுகிற கானானை வாக்களித்திருக்க மாட்டார். வனாந்திரத்திலிருந்து பரிசுத்தத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க மாட்டார்.

தேவபிள்ளைகளே, உங்கள் ஆத்துமா வாழ்வது போல, நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டுமென்பதே, கர்த்தருடைய சித்தமும் பிரியமுமாயிருக்கிறது. ஆனால், ஒன்றை நீங்கள் திட்டமாய் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் உங்களை உலகப்பிரகாரமாய் ஆசீர்வதித்து ஐசுவரியத்தை தரும்போது, உங்களுடைய கண்களை அதன்மேல் வைக்காமல், ஆசீர்வாதத்தின் ஊற்றுக்காரணராகிய கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும். கர்த்தர் செழுமையின் நாட்களை தரும் போது, கர்த்தருடைய ஊழியங்களுக்கு வாரி வழங்குங்கள். ஏழை மக்களையும், அனாதைகளையும், திக்கற்றவர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

கனியுள்ள மரத்தை நோக்கி பறவைகள் பறந்து வருவது போல, அநேக தேவை யுள்ள ஊழியக்காரர்கள் உங்களை நாடி வரக்கூடும். தண்ணீர் நிறைந்த குளத்தை நோக்கி தாகம் தீர்க்க மிருகஜீவன்கள் வருவதுபோல, அநேக ஏழை மக்கள் உங்களை நோக்கி வரக்கூடும். கர்த்தருக்கு கொடுப்பது போல மனமுவந்து கொடுங்கள்.

வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்" (ஆதி. 24:1). "ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்" (ஆதி. 13:2). தேவபிள்ளைகளே, உங்களுக்கும் கர்த்தர் பசுமையான நாட்களைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- "கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்" (ஆதி. 24:35).