தேவ ஆரோக்கியம்!

"உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்" (யாத். 23:25).

நீங்கள் தெய்வீக ஆரோக்கியத்தோடு வாழவேண்டுமென்பதே, கர்த்தருடைய பரிபூரண சித்தமாயிருக்கிறது. நீங்கள் வியாதிக்குட்படாமல், நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பது பெரிய ஆசீர்வாதம் அல்லவா?

பழைய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்த இஸ்ரவேல் ஜனங் களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கும்போது, வியாதியை உன்னை விட்டு விலக்குவேன் என்று வாக்களித்தார். அப்படியானால், புதிய ஏற்பாட்டிலுள்ள தேவபிள்ளைகள் ஆரோக்கியத்தோடு விளங்க வேண்டுமென்று, அவர் எவ்வளவு அதிக ஆவலுள்ள வராயிருப்பார்!

பல சபைகளிலே, விசுவாசிகள் கொடுக்கிற சாட்சிகளைக் கேட்டிருக்கிறேன். "நான் வியாதியாயிருந்தேன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அநேகர் ஜெபித்தார்கள், தேவன் எனக்கு பூரண சுகம் கொடுத்தார். ஜெபித்த தேவ பிள்ளைகளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். தேவனுக்கு மகிமையுண்டாவதாக" என்று சொல்லுவார்கள்.

வியாதி குணமாகும்போது நன்றி செலுத்துகிறார்கள். ஆனால், வியாதியே வராதபடி தெய்வீக ஆரோக்கியத்தைக் கர்த்தர் கொடுத்திருக்கும்போது, கர்த்தருக் கும் நன்றி செலுத்துவதில்லை; ஊழியர்களுக்கும் நன்றி செலுத்துவதில்லை. வியாதிலிருந்து சுகம் பெறும்போது, நீங்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்துவது போலவே, வியாதியில்லாத வாழ்க்கையையும் கர்த்தரிடத்தில் கேட்டுப் பெற்று அதற்காகவும் நன்றி செலுத்த வேண்டும். நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும்.

தெய்வீக ஆரோக்கியத்திற்காக ஆண்டவரிடத்தில் கேட்கிற அதே வேளையில் தானே, நீங்கள் உங்களுடைய சரீர ஆரோக்கியத்திற்கான வழி முறைகளை தேடிக் கொள்ள வேண்டும். ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு, ஏழாம் நாளிலே ஓய்வு பெற வேண்டும் என்ற நியதியை கர்த்தர் தாமே கொடுத்திருக்கிறார். சரீரத்திற்கு நிச்சயமாகவே ஓய்வு தேவை. சரீரம் மிகவும் களைத்து போய்விட்டதென்றால், நீங்கள் சரியாய் சிந்தித்துச் செயல்பட முடியாது.

அதே நேரம் சற்று ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் வேலையைத் தொடங்கு வீர்களென்றால், இன்னும் புது பெலத்தோடும், உற்சாகத்தோடும் கடமைகளை நிறைவேற்ற முடியும். சிலர் இரவெல்லாம் கண்விழித்திருப்பார்கள். இடைவிடாமல் பிரயாணம் செய்வார்கள். சரியான நேரத்திற்கு உணவு அருந்தாமல், இயற்கை விதிகளை மீறுவார்கள். முடிவிலே சரீரம் பெலவீனப்பட்டு வியாதிப்படும்போது, "ஏன் ஆண்டவரே எனக்கு இந்த வியாதி?" என்று கதறுவார்கள்.

நீங்கள் சிந்தித்து செயல்படும்போது, கர்த்தர் உங்களுக்கு அறிவையும், புத்தியையும், விவேகத்தையும் தந்தருளுவார். வேண்டுமென்றே மழையில் நனைந்து, ஜுரம் வந்துவிட்டது என்று சொல்லுவதில் அர்த்தமில்லை. ஆரோக்கியத்தைப் பேண, சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாய் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் சரிவர செய்யும்போது, கர்த்தர் தம்முடைய சித்தத்தின்படி தாம் செய்ய வேண்டிய கடமைகளைத் செய்வார்.

நினைவிற்கு:- "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32).