தேவ சமூகம்!

"என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்" (யாத். 33:14).

ஒவ்வொருநாளும், மாதமும், வருடமும் கர்த்தருடைய சமுகம் உங்களுக்கு முன்பாகச் செல்லட்டும். அவருடைய சமுகம் உங்களுக்கு முன்பாகச் செல்லும் போது, எந்த சத்துருவினுடைய வல்லமையும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. எந்த தடைகளும் குறுக்கிட முடியாது. உங்கள் ஓட்டம் வெற்றியுடன் முடியும்.

மோசே வனாந்திரத்தில் பயணம் செய்தபோது, ஆண்டவரைப் பார்த்து மனதுருகி, "உம்முடைய சமுகம் எங்களுடனேகூட செல்லாமல் போனால் எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டு போகாதிரும்" என்று கேட்டார். உடனே கர்த்தர், "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" (யாத். 33:14) என்று சொன்னார்.

அநேகர் இந்த ஜெபத்தையும், வாக்குத்தத்தத்தையும் பிரயாணம் பண்ணும் போது சொல்லுவார்கள். இந்த வசனத்தை புத்தாண்டு செய்தியாகவும் பிரசங்கிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே, இதை தன்னுடைய அனுபவமாக்குகிறார்கள்.

"சமுகம்" என்கிற வார்த்தையிலே, "முகம்" என்கிற பதம் இணைந்திருக்கிறதைக் காணலாம். தேவ சமுகம் என்று சொல்லும்போது, கர்த்தருடைய முகத்தின் பிரசன்னம் அங்கே இணைந்திருக்கிறது. கர்த்தருடைய முகத்தைப் பார்க்கும்போது, உங்களுடைய உள்ளம் மகிழ்ந்து களிகூரும் அல்லவா? பெற்றோரின் முகங்கள் பிள்ளைகளுக்கு குதூகலத்தை உண்டாக்குகிறது அல்லவா? ஆகவேதான், தாவீது கர்த்தருடைய சமுகத்தை உணரும்போதெல்லாம் மகிழ்ந்து களிகூர்ந்தார். "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங். 16:11) என்று சொல்லுகிறார்.

மேகத்தின் முகத்தைப் பார்க்கும்போது, மயிலுக்கு மகிழ்ச்சியும், கொண் டாட்டமும் ஏற்படுகின்றன. தன் சிறகுகளை விரித்து, அழகாக நடனமாடுகிறது. மயில் நடனமாடுகிறதைப் பார்க்கும்போது, வான்கோழிகளுக்கும் சந்தோஷம். அவைகளும் தங்கள் சிறகுகளை விரித்து நடனமாடுகின்றன. மேகத்தைக் காணும் போது, இந்த பறவைகளுக்கு அத்தனை மகிழ்ச்சி இருக்குமென்றால், கர்த்தருடைய சமுகத்தை காணும்போது, உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாயிருக்கும்!

ஒருமுறை, உடன்படிக்கைப் பெட்டி தாவீதின் நகரத்திற்குள் வருகிறதை தாவீது கண்டபோது, அதைச் சுற்றிலும் கர்த்தருடைய சமுகம் நிரம்பியிருக்கிறதை உணர்ந்தார். ஆகவே, தேவ சமுகத்திற்கு முன்பாக அவர் முழு பெலத்தோடு நடனமாடி களிகூர்ந்தார். மற்றவர்கள் தன்னைப் பார்க்கிறார்களே என்று அவர் கவலைப்படவில்லை.

தாவீதின் மனைவியாகிய மீகாள், அவர் நடனமாடுவதைக் குறித்து குத்தலாக பேசியபோது, "என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவ னாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன் (2 சாமு. 6:21) என்று தாவீது கூறினார். தேவ பிள்ளை களே, கர்த்தருடைய சமுகத்தில் வல்லமையும், பராக்கிரமமுமுண்டு. ஆனந்தமும், பூரண பேரின்பமுமுண்டு. மேலும், அவருடைய சமுகத்தில் கனமும், மகிமையுமுண்டு.

நினைவிற்கு:- "மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்" (1 நாளா. 16:27,28).