தேவ நதி!

"தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்" (சங். 65:9).

கர்த்தர் உங்களைச் சிங்காரவனமாக, அழகான தோட்டமாக தெரிந்து கொண்டார். நேசர் உலாவி வருகிற தோட்டம் நீங்கள்தான். நேசரின் சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம், உங்களுடைய உள்ளம் மகிழ்ந்து களிகூரும்.

கர்த்தர் ஏதேன் தோட்டத்தைச் சிருஷ்டித்தபோது, மனிதனுக்கு ஒரு கடமையைக் கொடுத்தார். தானும் ஒரு கடமையை ஏற்றுக் கொண்டார். மனிதனுக்குக் கொடுத்த கடமை என்ன? "தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்" (ஆதி. 2:15).

வேதம் சொல்லுகிறது, "தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்" (சங். 65:9). தோட்டத்தைப் பண்படுத்த வேண்டியது மனிதனுடைய கடமை. தேவநதியினால் செழிப்பாக்க வேண்டியது, கர்த்தருடைய கடமை என்று.

தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளத்தை தரிசு நிலமாக வைத்திராமல், வேத வசனத்தின்படி அதை பண்படுத்துங்கள். உங்களுக்கு வருகிற கோபம், எரிச்சல் போன்ற களைகளைப் பிடுங்கி தோட்டத்தைச் சுத்திகரியுங்கள். வசனம் உள்ளத்தின் ஆழத்திற்குள் செல்ல முடியாதபடிக்கு உள்ள சிறுசிறு கற்கள், ஓடுகள் போன்ற மீறுதலான பாவங்களை அப்புறப்படுத்தி, தேவ நதி உங்களுக்குள் பாவதற்கான வழி வாய்ப்புகளை உண்டாக்குங்கள். அப்பொழுது தேவ நதி உங்களுக்குள் பாய்ந்து, உங்களுடைய குடும்ப வாழ்க்கையையும், ஆவிக்குரிய ஜீவியத்தையும் நிச்சயமாகவே செழிப்பாக மாற்றும்.

நீங்கள் கர்த்தருடைய பிள்ளையாக மாறும்போது, உங்களுக்கு செழிப்பான சுதந்தரங்களுண்டு, வாக்குத்தத்தங்களுண்டு, தேவ பிரசன்னமுண்டு. ஆகவே நீங்கள் தாவீதைப்போல, "செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" என்று சொல்ல, கர்த்தர் உங்களுக்கு செழிப்பான சுதந்தரங்களை வைத்திருக்கிறார்.

காரணம், உங்களுக்குள்ளே பரிசுத்த ஆவியாகிய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, "புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப் போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்" (சங். 72:6,7).

இந்த பூமிக்குரிய வாழ்க்கையிலே, முதலாவதாக, "உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்" (நீதி. 11:25). இரண்டாவதாக, "செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்" (நீதி. 14:11). மூன்றாவதாக, "கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்" (நீதி. 28:25) என்று சாலொமோன் ஞானி மூன்று காரியங்களை குறிப்பிடுகிறார்.

ஆவிக்குரிய செழிப்போ, பரிசுத்த ஆவியானவரையே சார்ந்திருக்கிறது. அந்த செழிப்பிலே ஆவியின் வரங்களும், ஆவியின் கனிகளும் செயல்படுகின்றன. செழிப்பான ஆவியின் கனி ஒருவரிடத்தில் காணப்படுவதைப் பார்க்கிலும், மேன்மையானது வேறு ஒன்றுமில்லை. தேவபிள்ளைகளே, நீங்கள் செழிப்படையும்படி பரிசுத்த ஆவியினால் எப்போதும் நிரம்பியிருங்கள்.

நினைவிற்கு:- "அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினா லும் நம்முடைய இருதயங்களை நிரப்பினார்" (அப். 14:17).