தகப்பனைப்போல!

"பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டு போவதுபோல" (எண். 11:12).

கர்த்தர் உங்களுக்கு அன்புள்ள தகப்பனாயிருக்கிறார். அவர் என்றென்றைக்கும் உங்களுடைய தகப்பனாயிருக்கிறதினாலே, "நித்திய பிதா" என்று அழைக்கப்படு கிறார் (ஏசா. 9:6). "நித்திய பிதா" என்றால், "நேற்றும் இன்றும் என்றென்றும் பிதா" என்பது அர்த்தமாகும். நித்திய நித்திய காலமாய் அவரே உங்களுக்குப் பிதாவாயிருப்பார். அவரை நீங்கள் தெய்வமாய் கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்.

முதலாவதாக, அவர் உங்களை சுமக்கிற பிதா. உலகப் பிரகாரமான தகப்பன், தன் பிள்ளையை தோளின் மேல் வைத்து சுமப்பான். அந்த பிள்ளை இரண்டு கால்களையும் மார்பிலே போட்டுக்கொண்டு தகப்பன் தோளில் கெம்பீரமாய் அமர்ந்து, தகப்பனுடைய தலைமுடியை உறுதியாய்ப் பிடித்துக்கொள்ளும். தகப்பன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நடப்பான். பிள்ளைக்கு விளையாட்டு காட்டுவான். பிள்ளை யானையின் மேல் பவனி வருவதைப் போல தகப்பனுடைய தோளிலே அன்போடு பவனி வரும். அதுபோல பரம தகப்பன் உங்களை நடத்திக்கொண்டு செல்லுகிறவரல்ல; சுமந்துகொண்டு செல்லுகிறவர்.

இரண்டாவதாக, ஒரு தகப்பன் பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறுகிறான். வேதம் சொல்லுகிறது: "தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்" (1 தெச. 2:12). ஆம், பரம தகப்பன் ஊழியர்களின் மூலமாக, வேத வசனங்களின் மூலமாக உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார்.

மூன்றாவதாக, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளைத் திருத்துகிறான். பிள்ளைகளு டைய நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும். அதைப் பிரம்பால் திருத்த வேண்டியது தகப்பனுடைய கடமை. வேதம் சொல்லுகிறது, "தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்" (நீதி. 3:12).

"நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மை சிட்சிக்கிறார்" (எபி. 12:9,10) என்று வேதம் சொல்லுகிறது.

நான்காவதாக, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளின் மேல் கரிசனையுள்ளவனாக இருக்கிறான் (யோபு 31:18). உலகப்பிரகாரமான தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளின் நலனிலே எவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்! அவர்களுக்கு உணவளிக்கிறார்கள், உடுத்துவிக்கிறார்கள், நல்ல படிப்பைக் கொடுக்கிறார்கள், அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறார்கள்.

அப்படியே பரம பிதாவும் உங்கள்மேல் அதிக கரிசனையுள்ளவராயிருக்கிறார். எலிசாவை பஞ்சகாலத்தில் காகத்தைக் கொண்டும், சாரிபாத் விதவையைக் கொண்டும் போஷித்து பராமரித்த பரம பிதா உங்களையும் பராமரிப்பார். தேவ பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை நித்திய பிதாவாகக் கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்.

நினைவிற்கு:- "தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்" (சங். 103:13).