தேவ வசனம்!

"அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசா. 55:11).

தேவ வசனம் ஆவியும் ஜீவனுமானது. ஆத்துமாவை உயிர்ப்பிக்க வல்லமை யுள்ளது. அது ஒருபோதும் வெறுமையாய்த் திரும்புவதில்லை. நீங்கள் வேதத்தை விரும்பி வாசிப்பதால், தியானிப்பதால் உங்களுக்குப் பெரிய நன்மையுண்டாகும்.

கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களிலே சிறந்த ஆசீர்வாதம், வேத புத்தகமாகும். வேத வசனத்தின் மூலமாய், கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களைத் தெரிந்து கொள்ளுகிறீர்கள். வேத வசனங்கள் மூலமாய், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிறீர்கள். ஒரு கப்பல் மாலுமியை காந்த ஊசி வழி நடத்துகிறதைப் போல, வேத வசனம் உங்களை அருமையாய் வழி நடத்துகிறது.

ஒரு சுவிசேஷக் குழுவினர், கர்த்தருடைய வசனம் செல்லவே முடியாத கம்யூனிஸ்டு தேசங்களில் தேவ வசனத்தை எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டுமென்ற வாஞ்சை கொண்டார்கள். ஆகவே, சுவிசேஷத்தைப் பரப்ப ஒரு புதிய வழியைக் கையாண்டார்கள். அதுதான் சிறு கப்பல் முறை. பத்து அடி தூரத் திற்குள் நூறு கப்பல்களை அவர்கள் அடுக்கிவிட்டார்கள்.

அந்த கப்பல்கள் மெதுவாய் செல்லக் கூடியவைகள். எந்த இயந்திரமும் இல்லாதவைகள். இது எப்படி சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா? அதுதான் காலி பாட்டில் கப்பல். காலி பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதற்குள்ளே மாற்கு எழுதிய சுவிசேஷத்தை வைத்து, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா கடற்கரையிலிருந்து ஜெபத்துடன் தண்ணீருக்குள் தள்ளிவிட்டார்கள். அந்த பாட்டில்கள் அழகாய் மிதந்து தண்ணீருக்குள் சென்றன.

அப்படி ஆயிரமாயிரமான பாட்டில் கப்பல்கள் எந்த இயந்திரமுமில்லாமல், விசையுமில்லாமல், திசை திருப்பும் கருவியுமில்லாமல், இயக்க ஆட்களுமில்லாமல் அழகாய், அருமையாய் மிதந்து சென்றன. கரையிலிருந்து ஜெபவீரர்கள் கரம் அசைத்து வழியனுப்பி வைத்தார்கள். வேத வசனம் ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை என்பது அவர்களது திடமான தீர்மானம்.

எத்தனையோ மாதங்கள் கடந்து சென்றது. ஒருநாள் ஒரு இளைஞன் கடற் கரையிலே கடலின் அலைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவன் மிதந்துவந்த அந்த பாட்டிலை நோக்கிப் பார்த்தான். அந்த பாட்டில்களில் ஒன்று தன்னையே நோக்கி வந்ததைப்போல இருந்தது. எங்கிருந்தோ தன்னை நோக்கி ஒரு செய்தி வருகிறதே என்று எண்ணி, ஆவலோடு அதை எடுத்தான்.

அந்த பாட்டிலின் உள்ளே மாற்கு எழுதிய நற்செய்தி நூல் இருந்ததை கண்டான். அதை எடுத்து, ஆவலுடன் இரவும் பகலும் வாசித்தான். அவனுடைய உள்ளம் பரவசமடைந்தது. கிறிஸ்துவுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தான். அந்த பாட்டில், மூன்று ஆண்டு காலம் கடலிலே பயணம் செய்து சரியான நபரைத்தேடி, சரியான நேரத்தில் வந்தது. அந்த பாட்டில் கப்பலை இயக்கியவர் கர்த்தரே!

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காகவும், சுவிசேஷத்திற்காகவும் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். வேத வசனம் ஒருபோதும் வெறுமையாய் திரும்பாது என்பதை மறந்து போகாதிருங்கள்.

நினைவிற்கு:- "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது" (சங். 19:7).