தேவ புத்திரர்!

"சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்" (மத். 5:9).

சமாதானம் பண்ணுவதே ஒரு பாக்கியமான அனுபவம். யார் யாருடைய வாழ்க்கையிலே நீங்கள் சமாதானம் பண்ணுகிறீர்களோ, அவர்கள் நிச்சயமாகவே உங்களுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருப்பார்கள். அதுமட்டுமல்ல, சமாதானம் பண்ணும்போது, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவீர்கள்.

ஒருமுறை ஒரு சுவிசேஷகர் கிராமங்கள், பட்டணங்களெல்லாம் நடந்து சமாதான பிரபுவான இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தார். கூட்டங்களில் பல அற்புதங்கள் நடந்தன. அநேகர் தங்களுடைய வாழ்க்கையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்தார்கள். ஆனால் அவருக்கு பணஉதவி செய்யவோ, பாராட்டவோ, ஆதரிக்கவோ ஒருவருமில்லை.

அவர் பல நாட்கள் ஊழியம் செய்துவிட்டு, தன்னுடைய கிராமத்திற்கு திரும்பிய போது, அங்கே ஒரு அரசியல்வாதியை வரவேற்க அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருக்கிறதைக் கண்டார். எங்கும் தோரணங்கள், மின் விளக்குள், அலங்காரங்கள். அதைக் கண்டதும் இந்த ஊழியக்காரருடைய உள்ளம் சோர்வுற்றது.

ராஜாதி ராஜாவின் சமாதான பணியில், எத்தனையோ மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து வந்த எனக்கு எந்த வரவேற்புமில்லை. ஆனால் இந்த மக்களோ, சுயநலவாதியாய் பொய்யும் புரட்டும் உரைக்கிற ஒரு அரசியல்வாதிக்கு, இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கிறார்களே என்று எண்ணி வேதனைப்பட்டார்.

அப்பொழுது கர்த்தருடைய அன்பு அவரை அரவணைத்தது. அவர், "என் பிள்ளையே, அந்த அரசியல்வாதி அவனுடைய ஈவை இந்த உலகத்திலே பெற்றுக் கொள்ளுகிறான். இந்த உலக வாழ்க்கையோடு அவனுடைய மதிப்பு முடிந்து போகிறது. ஆனால் உன்னுடைய பாக்கியமோ மேலானது. நீ என்னுடைய குமாரன். நீ பரலோகத்திற்கு வரும்போது, உனக்கிருக்கிற வரவேற்பு இந்த அரசியல்வாதிக்கு இருந்த வரவேற்பைப் பார்க்கிலும், கோடானகோடி மடங்கு மேன்மையானதாய் இருக்கும்" என்றார்.

தேவபிள்ளைகளே, உலகப்பிரகாரமாக நீங்கள் செய்யும் பெரிய சாதனைகளைப் பார்க்கிலும், தேவனுக்கும் மனிதனுக்கும் சமாதானம் உண்டு பண்ணும் சுவிசேஷ பணியிலே ஈடுபட்டிருப்பீர்களானால் நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

நீங்கள் இந்த பூமியிலே கர்த்தருடைய ஸ்தானாதிபதிகளாக மட்டுமல்ல, அவருடைய சொந்த பிள்ளைகளாகவுமிருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய பிள்ளை களாகும்படி அவர் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். அவரை "அப்பா, பிதாவே" என்று அழைக்கக்கூடிய, புத்திரசுவிகார ஆவியையும் தந்திருக்கிறார். இன்றைக்கு, இந்த உலகத்திற்கு சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவை.

நீங்கள் குடும்பங்களுக்குள்ளே, சபைகளுக்குள்ளே சமாதானம் பண்ண முயற் சிக்கும்போது, பலர் உங்களைக் குறைவாக எண்ணலாம். அற்பமாகவும் நினைக் கலாம். ஆனாலும் உங்களுடைய முயற்சியில் சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தர் உங்களுடைய முயற்சிகளை பாராட்டுவார். அப்படிப்பட்ட முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளும்போது, நிச்சயமாகவே பூமியிலும், பரலோகத்திலும் உங்களுடைய பலன் மிகுதியாய் இருக்கும்.

நினைவிற்கு:- "சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்" (ரோமர் 10:15).