தேவ அன்பு!

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

வேதப்புத்தகம் முழுவதும், தேவ அன்பினால் நிறைந்திருக்கிறது. அதை பிழிந்து சாறெடுத்தால், அந்த சாறெல்லாம், தேவ அன்பின் சொட்டுகளாகவே விளங்கும். "இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" என்று வேதம் சொல்லுகிறது.

நதி என்ற ஒன்று உண்டென்றால், அதற்கு உற்பத்திஸ்தானம் என்ற ஒன்று நிச்சயமாகவே இருக்க வேண்டும். அதுபோல, அன்பு என்ற ஒன்று உண்டென்றால் அது ஆரம்பிக்கிற இடம் ஒன்று நிச்சயமாகவே இருக்க வேண்டும். அந்த அன்பு பிறந்த இடம்தான், பிதாவாகிய தேவனுடைய உள்ளம். அதுவே, அன்பின் பெரு வெள்ளத்தின் உறைவிடம். பிதா, உலகத்திற்கு அந்த அன்பை வெளிப்படுத்தச் சித்தமானபோது, தம்முடைய ஒரே பேறான குமாரனையே இந்த உலகத்துக்கு கொடுக்கும்படி தீர்மானித்தார்.

அக்கிரமக்காரருக்காகவும், பாவிகளுக்காகவும் தன்னுடைய செல்லப் பிள்ளையை கல்வாரிச் சிலுவையிலே தந்தருளினார். அதுதான் தெய்வீக அன்பு. தியாகமான, எந்த பதிலும் எதிர்பாராத, உங்களை வியக்க வைக்கும் அன்பு. இந்த உலகத்தில் பொய்யான, மாய்மாலமான, சுயநலமான அன்புகள்தான் நிரம்பியிருக்கின்றன. அநேகர் அன்பாயிருக்கிறதுபோல நடிப்பார்கள். ஆனால், உண்மையில் அது போலியான அன்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.

இயேசுவினுடைய அன்பைப் பாருங்கள். "தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்" (யோவா. 13:1). முடிவுபரியந்தம் என்றால், கல்வாரி சிலுவையில் தன்னுடைய ஜீவனை கொடுத்த அந்த முடிவுபரியந்தம் என்றும், உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் வைக்கிற அன்பு என்றும் அர்த்தமாகும்.

அன்பு தியாகம் செய்யத் தூண்டும். ஆபிரகாம் கர்த்தர் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்ததினாலே, ஈசாக்கை தன்னுடைய ஏகசுதன் என்றும் பாராமல் கர்த்தருக்காக அர்ப்பணிக்க முன் வந்தார். அவனை பலிபீடத்தின் மேல் கிடத்தி விட்டார். அதுபோலத்தான், பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை கல்வாரி பலிபிடத்தில் கிடத்தினார்.

வேதம் சொல்லுகிறது, "தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம் மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லா வற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32).

தேவபிள்ளைகளே, கல்வாரி அன்பை சிந்தித்து, அவருடைய காயங்களையும், அவர் உங்களுக்காகப்பட்ட பாடுகளையும் தியானித்துப் பாருங்கள். உங்களுக்காக அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, பிழியப்பட்டாரே. அந்த அன்பு உங்களுடைய அன்பை எதிர்பார்க்கிறது. கிறிஸ்துவினுடைய அன்பு உங்களை நெருக்கி ஏவட்டும். ஊழியங்களுக்குள் உந்திக்கொண்டு செல்லட்டும். பட்சபாதமில்லாத தேவன், தமது அன்பை நமக்கு ருசிக்கக் கொடுத்தாரே! நாமும் கூட பட்சபாதமில்லாத அன்பை மற்றவர்களுக்கு கொடுத்து, தேவ ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்வோம்.

நினைவிற்கு:- "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்" (1 யோவா. 3:1).