தேவ சமாதானம்!

"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவா. 14:27).

"சமாதானம்" என்ற வார்த்தை எத்தனை இனிமையானது. அதைக் கேட்கும் போதே இருதயத்திலே ஒரு ஆறுதல், ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இயேசுகிறிஸ்து, "என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்றார்.

ஒருமுறை சில மிஷனெரிகள், மலைகளிலே வாழுகிற ஆதிவாசிகளைக் கர்த் தரண்டை வழி நடத்தினார்கள். அந்த ஆதிவாசிகளுக்கு வேதம் இல்லை. மொழி பெயர்க்கக் கூடிய அளவு, அவர்கள் மொழியில் போதிய சொல் வளமுமில்லை. அன்பு, சந்தோஷம், சமாதானம், மகிழ்ச்சி போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, எந்த வார்த்தைகளைக் கொடுப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தார்கள்.

ஒருநாள் அந்த மிஷனெரி, "சமாதானம்" என்ற வார்த்தையை எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியாமல், ஒரு ஆதிவாசியிடம் அதை விளக்கி பேசிக் கொண்டிருந்தார். இயேசு உள்ளத்தில் வரும்போது நம் கலக்கம், சஞ்சலங்களெல்லாம் நீங்குகிறது. உள்ளம் அமைதியடைகிறது. அதுவே சமாதானம் என்றார்.

பின்பு அந்த ஆதிவாசியிடம் அவர், "சமாதானம்" என்பதற்கு உங்களுடைய மொழியில் ஏதாவது வார்த்தை உண்டா? என்று கேட்டார். அந்த ஆதிவாசி, "சமாதானம்" என்பதற்கு எங்களுடைய பாஷையில் வார்த்தைகளில்லை. ஆனால் "இயேசு உங்கள் இருதயத்தை உட்கார பண்ணுவார், அல்லது அமர்ந்திருக்கப் பண்ணுவார்" என்று மொழி பெயர்த்துவிடலாம் என்றான்.

அந்த மிஷனெரி அதை ஆழ்ந்து சிந்தித்தார். சமாதானம் என்பது அமரப் பண்ணு வதாகும். கொந்தளிக்கும் கடலை அமரப் பண்ணுவது போல, கர்த்தர் கொந்தளிக் கும் உள்ளத்தில் சமாதானத்தைக் கொடுத்து, அமரப் பண்ணுகிறார் அல்லவா? ஆகவே, அப்படியே அவர் மொழி பெயர்த்துவிட்டார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கை அலைகளினாலும், காற்றுகளி னாலும் அலைமோதிக்கொண்டிருக்கிறதா? கர்த்தர் இப்போதே உங்கள் வாழ்க்கை யில் சமாதானத்தை தருகிறது மாத்திரமல்ல, உங்கள் உள்ளத்தையும் அமரப் பண்ணுகிறவராயிருக்கிறார். தேவன் உங்களுக்கு கொடுக்கிற ஈவுகளில் சமாதானமும் ஒன்று. உள்ளத்தில் மட்டுமல்ல, உங்கள் ஆவியிலும், ஆத்துமாவிலும் சமாதானம். அதுவே தேவனுடைய பிள்ளைகளுக்குக் கிறிஸ்து தரும் பெரிய ஈவாகும்.

அப். பவுல், தன்னுடைய ஒவ்வொரு நிருபத்தை ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும், "உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக" என்றும், "சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பாராக" என்றும் சொல்லி வாழ்த்துகிறார். நீங்கள் சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கு சமாதானத்தை கொடுக்கிறவர்களாயுமிருக்க வேண்டும்.

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமாதானமுண்டு (கொலோ. 1:20). சுவிசேஷத்தினாலே சமாதானமுண்டு (எபே. 6:15). பரிசுத்தாவியினாலே சமாதானமுண்டு (எபே. 4:3, கலா. 5:22). தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாகவும், சமாதானத்தில் தேறினவர்களாகவும் ஜீவியுங்கள்.

நினைவிற்கு:- "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர் களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" (எபி. 12:14).