தேவ வாசஸ்தலம்!

"நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப் பட்டு வருகிறீர்கள்" (எபே. 2:22).

நீங்கள் தேவனுடைய வாசஸ்தலம், தேவாதி தேவன் உங்களுக்குள்ளே வாசம் பண்ண விரும்புகிறார். உங்களை தம்முடைய மகிமையின் பிரசன்னத்தால் நிரப்ப விரும்புகிறார். இதை நினைக்கும்போதே, உங்களுடைய உள்ளம் பரவசமடைந்து பொங்குகிறது அல்லவா?

நீங்களே அவருடைய வாசஸ்தலம். பழைய ஏற்பாட்டிலே, அவர் ஏதேன் தோட்டத்தில் இறங்கி உலாவினார். ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத் திலே, சாலொமோன் கட்டிய தேவாலயத்திலே வாசம் பண்ணும்படி மகிமையின் பிரசன்னத்தோடு இறங்கி வந்தார்.

அவர் கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாசம் பண்ண விரும்பாமல் (அப். 17:24), மனுஷனுடைய உள்ளத்திலே வாசம்பண்ண சித்தமானார். யார் யாருடைய உள்ளம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி தூமையாக்கப் பட்டிருக்கிறதோ, அவர்களுடைய உள்ளத்திலே கர்த்தர் வாசம் பண்ண விரும்புகிறார் (2 கொரி. 6:16).

வேதம் சொல்லுகிறது, "இதோ மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ் தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவரு டைய ஜனங்களாயிருப்பார்கள்; தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர் களுடைய தேவனாயிருப்பார்" (வெளி. 21:3).

கர்த்தர் எங்கே வாசம் பண்ணுகிறாரோ அங்கே அவருடைய மகிமையின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும். கர்த்தர் உங்களுடைய உள்ளத்தில் வாசம் பண்ணுவாரென்றால், உங்கள் வாழ்க்கையும் பிரகாசமாயிருக்கும். பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தில் மூன்று பகுதிகளுண்டு. அவை, வெளிப்பிர காரம், பரிசுத்த ஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் என்பதாகும். இந்த மூன்று ஸ்தலத்திலும் உள்ள வெளிச்சம் மூன்றுவித வித்தியாசமானதாயிருந்தது.

முதலாவது, வெளிப்பிரகாரத்திலே சூரியனுடைய வெளிச்சம் எல்லாருக்கும் பிரகாசமாயிருந்தது. இரண்டாவது, பரிசுத்த ஸ்தலத்திலே குத்துவிளக்கின் வெளிச்சம் ஆசாரியருக்கு வெளிச்சமாயிருந்தது. மூன்றாவது, மகா பரிசுத்த ஸ்தலத்தில் விளக்குகளில்லை, தேவனுடைய மகிமையே அதில் பிரகாசித்தது.

அதுபோலவே, தேவன் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு தம்முடைய வெளிச்சத்தைத் தருகிறார். உங்களுடைய சரீரக் கண்கள் பகலிலே சூரியனுடைய வெளிச்சத்தையும், இரவிலே, சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் வெளிச்சத்தையும் காண்கிறது. இரண்டாவது, ஆத்துமாவுக்கு வெளிச்சமாக மனச்சாட்சியை தருகிறார். வேத வெளிச்சத்தின் மூலமாக ஆத்துமாவை வழிநடத்துகிறார்.

மூன்றாவது, ஆவியில் தெய்வீக வெளிச்சத்தினால் உங்களுடைய உள்ளத்தை நிரப்புகிறார். பரிசுத்த ஆவியின் மகிமையால் ஆட்கொள்ளுகிறார். நீங்கள் பெற்றிருக்கிற அந்த ஆவியின் வெளிச்சத்திலே, நீங்கள் தேவனுடைய வாசஸ்தலமாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

தேவபிள்ளைகளே, அந்தகாரம் நிறைந்த உங்கள் வாழ்க்கையை, கர்த்தருடைய பிள்ளையாய் நடந்து கொள்ளும்படி, அவருடைய வெளிச்சத்திற்கு ஒப்புக்கொடுப் பீர்களானால் (எபே. 5:8), தேவன் தாபரிக்கும் வாசஸ்தலம் நீங்களே!

நினைவிற்கு:- "அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்" (யோவான் 5:35).