தேவ பிரசன்னம்!

"உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங். 16:11).

நீங்கள் ஜெப நேரத்தில், தேவ பிரசன்னத்தை உணரும்போதுதான் உங்களால் ஊக்கமாக ஜெபிக்கமுடியும். கர்த்தருடைய சமுகத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். அவருடைய பாதப்படியின் இனிமையை ருசித்து மகிழ முடியும்.

சில இடங்களுக்குச் சென்று ஜெபிக்கும்போது, அங்கே தேவ பிரசன்னம் அதிகமாயிருக்கிறதை உணரமுடியும். தேவ பிள்ளைகள் கூடி தேவனை ஆராதித்து, தொழுதுகொள்ளுகிற இடங்களில், அதிகமாக கர்த்தருடைய சமுகம் நிழலாடும். செய்தி கொடுக்கிற இடங்களில் கர்த்தருடைய பிரசன்னம் மிகவும் அதிகமாக, தேவ ஆவியானவர் நிரப்புகிறதாக இருக்கும்.

இன்னும் சில இடங்களில் தேவ ஜனங்கள் ஒருமனமாக கைகளை உயர்த்தி, கர்த்தரை ஸ்தோத்தரித்து துதிக்கும்போது, கர்த்தருடைய பிரசன்னம் அப்படியே இறங்கி கடந்து வரும். அதுபோல ஜெப நேரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தேவ பிரசன்னம் அளவில்லாமல் ஜனங்கள் மத்தியில் இறங்குவதை உணரலாம்.

ஒரு மல்லிகை மலரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மலரைச் சுற்றிலும் இனிமையான வாசனை பரவி சூழ்ந்திருக்கிறது. ஒரு காந்தத்தைச் சூழ ஒரு ஈர்ப்பு சக்தியாகிய விசை நிரம்பியிருக்கிறது. அதுபோல, தெய்வீக பிரசன்னத்தால் ஒரு ஆனந்தம், ஒரு வல்லமை, ஒரு மகிமை சூழ்ந்திருக்கிறது.

தேவ பிரசன்னத்துக்கு ஓடிச்சென்று ஜெபிப்பது, தாவீதுக்கு ஒரு இன்பமான அனுபவமாக இருந்தது. எப்பொழுதெல்லாம் தேவனுடைய சமுகத்தின் பிரசன் னத்தை அவர் உணர்ந்தாரோ, அப்பொழுதெல்லாம் அங்கே ஆனந்தத்தையும், பேரின்பத்தையும் கண்டார். ஆகவேதான், ஜெப நேரம் அவருக்கு பரவசத்தின் நேரமாக இருந்தது. உம்முடைய சமுகத்தில் ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு என்று சொல்லி, அவர் அகமகிழ்ந்து களிகூர்ந்தார்.

தாவீதின் நகரத்தை நோக்கி உடன்படிக்கைப் பெட்டி வந்தபோது, அங்கே கர்த்தருடைய பிரசன்னத்தை தாவீது அளவில்லாமல் உணர்ந்தபடியினாலே, கர்த்தருடைய சமுகத்தில் ஆடிப்பாடி களிகூர்ந்து துதிக்க ஆரம்பித்து விட்டார். தம்மை தாழ்விலிருந்து உயர்த்தின தேவ பிரசன்னத்திற்கு முன்பாக நடனமாட ஆரம்பித்து விட்டார். தேவ பிரசன்னத்தால் அவருடைய உள்ளம் பொங்கினது. அவருடைய கால்களும், கைகளும் நடனமாட ஆரம்பித்தன.

தேவபிள்ளைகளே, நீங்கள் எதை இழந்துபோனாலும், ஒரு போதும் தேவ பிரசன்னத்தை இழந்துப்போகாதிருங்கள். அநேகருக்குள் குற்றமனச்சாட்சி வாதிப்பதினால், தேவ பிரசன்னத்தை அனுபவித்து ஆனந்தமாய் களிகூர அவர்களால் முடிவதில்லை.

எந்த பாவமும், எந்த தடுப்புச் சுவரும் உங்களுக்கும், தேவனுடைய சமுகத் திற்குமிடையே வராதபடி காத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது உங்களை தேவ சமுகத்தில் நிலைநிறுத்துங்கள். கர்த்தருடைய பிரசன்னம் உங்களோடிருக்கிறதா என்று ஆராந்து பாருங்கள். அப்பொழுது நீங்கள் இம்மையிலும், நித்தியத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்.

நினைவிற்கு:- "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்" (யாத். 33:14).