மாறாத பிரசன்னம்!

"நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்" (யோவா 12:26).

கர்த்தர் தன்னுடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று, அவருடைய மாறாத பிரசன்னமாகும். கர்த்தர் இருக்கும் இடத்திலே ஊழியக்காரனுமிருப்பான். ஊழியக்காரனோடு கர்த்தருமிருப்பார். அன்றைக்கு தமக்கு ஊழியம் செய்த சீஷர்களோடிருந்து அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்தினதைப் போலவே, இன்றைக்கும் தமக்கு ஊழியம் செய்கிற ஒவ்வொரு ஊழியக்காரரோடும் இருக்கும்படி, கர்த்தருடைய பிரசன்னம் மாறாததாயிருக்கிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனுக்கு போனார்கள். அங்கேயும் கர்த்தருடைய பிரசன்னம் வந்தது. கர்த்தருக்கு ஊழியம் செய்ய விரும்பின தானியேலுக்கு கர்த்தர் தமது பிரசன்னத்தை அளவில்லாமல் கொடுத்தது மாத்திரமல்ல, பாபிலோன் ஞானிகளைப் பார்க்கிலும் அவருக்கு பத்து மடங்கு ஞானத்தை அதிகமாக கொடுத்தார்.

சிங்கக்கெபியிலே கர்த்தருடைய பிரசன்னம் இறங்குமா? ஆம், தானியேல் சிங்கக் கெபியிலே போடப்பட்டபோது, யூத ராஜ சிங்கமான கர்த்தர் சிங்கக்கெபியிலே இறங்கி, சிங்கங்களின் வாகளை கட்டி தானியேலைப் பாதுகாத்தார்.

அக்கினிச்சூளையிலே கர்த்தருடைய பிரசன்னம் இறங்குமா? ஆம், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினி ஜுவாலையில் போடப்பட்டபோது, தேவ குமாரன் அக்கினி சூளையில் இறங்கி உலாவினார். அக்கினி அவர்களை சேதப்படுத்தாதபடி பாதுகாத்துக்கொண்டார். தேவபிள்ளைகளே, அக்கினிமயமான சோதனை நேரங்களிலே கர்த்தர் உங்களோடிருக்கிறாரென்பதையும், அவர் உங்களைப் பாதுகாக்க வல்லவர் என்பதையும் மறந்து போகாதிருங்கள்.

கர்த்தர் சொல்லுகிறார், "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன் பேரில் பற்றாது" (ஏசா. 43:2).

நீங்கள் கர்த்தரோடும், கர்த்தர் உங்களோடுமிருப்பது எத்தனை பாக்கியமானது! கர்த்தருக்கு ஊழியம் செய்வது எத்தனை மகிமையானது! அவருடைய மாறாத பிரசன்னம் எப்போதும் உங்களோடிருக்கும். அது முட்கள் மத்தியிலானாலும், சிறைச்சாலையிலானாலும், தனியாய் நிற்க வேண்டிய கர்மேல் பர்வதமானாலும் சரி, கர்த்தர் எப்போதும் உங்கள் கூடவேயிருப்பார். உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று அவர் வாக்குத் தத்தம் செய்திருக்கிறார். வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

கர்த்தர் யோசுவாவை தன்னுடைய மகிமையான ஊழியத்திற்கு அழைத்தபோது, ஒரு அருமையான வாக்குத்தத்தத்தை கொடுத்தார் (யோசு. 1:5,9). அதே வாக்குத்தத்தத்தை கர்த்தர் இன்றைக்கு உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய மாறாத பிரசன்னமும், அவருடைய சமுகமும் நீங்கள் நினைக்கும்போதெல்லாம் உங்களோடிருந்து, உங்கள் வழிகளிளெல்லாம் பாதைகளை செவ்வையாக்குவார்.

நினைவிற்கு:- "நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை" (ஆதி. 28:15).