தேவ வல்லமை!

"உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்" (சங். 119:130).

தேவ வசனங்களில் வல்லமையிருக்கிறது. அது ஆவியாயும், ஜீவனுமாயு மிருக்கிறது. வேத வசனத்திலுள்ள வல்லமை பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கி விடுகிறது. தாவீது சொல்லுகிறார், "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது" (சங். 19:7).

இங்கிலாந்து தேசத்தை அரசாண்ட வில்லியம் என்ற ராஜா மரித்தபோது, அந்த இரவு வேளையில் அந்த அரண்மனையிலே உள்ள பிரபுக்கள் ஒரு சிறுமியைத் தேடினார்கள். அவளோ தன் அறையிலே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை தட்டியெழுப்பி, "நீ தான் இனி இங்கிலாந்து தேசத்தின் பட்டத்து அரசி" என்று சொன்னபோது, அவள் உடனடியாக முழங்காற்படியிட்டாள்.

பரலோக பிதாவை நோக்கி, "ஆண்டவரே, இந்த பொறுப்பை என் மேல் சுமத்துகிறார்கள். ஆனால் எனக்கு ஞானமோ, பெலனோ, வல்லமையோ இல்லை. நீரே என்னை வழிநடத்த வேண்டும்" என்று ஊக்கமாக ஜெபித்தாள். அந்த சிறுமி யின் ஜெபம், பிரபுக்களுக்கு ஆச்சரியத்தைக் கொண்டு வந்தது.

அந்த சிறுமிதான் விக்டோரியா மகாராணி. அவள் சிறு பிள்ளையாயிருந்த போதிலும் இங்கிலாந்தை திறமையாக ஆட்சிசெய்தாள். இங்கிலாந்து தேசத்தை பெரிய பிரிட்டீஷ் சாம்ராஜ்யமாய் மாற்றிவிட்டாள். விக்டோரியா மகாராணியின் காலத்திலே பிரிட்டீஷ் அடைந்த முன்னேற்றத்தைப் போல, வேறு எந்த காலத்திலும் அவர்கள் அவ்வளவு முன்னேறியதில்லை. "பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்கு சூரியன் அஸ்தமிப்பதில்லை" என்ற அளவிற்கு சாம்ராஜ்யம் விரிந்திருந்தது.

அந்த விக்டோரியா மகாராணியின் மேன்மைக்கு முக்கிய காரணம் அவளுடைய ஜெபமும், வேத வாசிப்பும், தேவ பயமும், கர்த்தர் மேலுள்ள பாசமும்தான். ஒருமுறை விக்டோரியா மகாராணி ஒரு குறிப்பிட்ட தேசத்திற்குப் போனபோது, அந்த தேச இளவரசன் ராணியைப் பார்த்து: "மகாராணி அவர்களே, இங்கிலாந்து தேசத்தின் வல்லமைக்கும், பெருமைக்கும் காரணம் என்ன?" என்று கேட்டான். உடனே விக்டோரியா மகாராணி வேத புத்தகத்தை எடுத்து உயர்த்திக்காட்டி, "இங்கிலாந்து தேசத்தின் மேன்மைக்கு வேதாகமமே காரணம்" என்றார்.

எந்த தேசம் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, கர்த்தர் அந்த தேசத்தை உயர்த்தி மேன்மைப்படுத்துகிறார். எந்த மனுஷன் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறானோ, அவன் மிகவும் அதிகமாய் ஆசீர்வதிக்கப் படுவான். தாவீது முன்மாதிரியாய் அந்த வேதத்தை வாசித்து நேசித்தார். இதனால் இஸ்ரவேலை ஆண்ட எல்லா ராஜாக்களுக்குள்ளும், தாவீது மிகவும் பேர்பெற்றவராகவும் விசேஷித்தவராகவும் விளங்கினார்.

தேவபிள்ளைகளே, அதிகாலையில் எழுந்ததும் முதலாவது வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேதத்தை சுமந்தால் நிச்சயமாகவே வேதம் உங்களை சுமக்கும். வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களெல்லாம் ஆம் என்றும், ஆமென் என்றும் உங்களுக்கு வந்து பலிக்கும். "வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே" (எபி. 10:23).

நினைவிற்கு:- "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங். 119:105).