நாவின் வல்லமை!

"ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்" (நீதி. 15:2).

நீதிமொழிகளின் புஸ்தகத்தில், நாவின் வல்லமையையும், நாவினால் வரும் அறிவையும் குறித்து நீங்கள் வாசிக்கலாம். நாவின் முக்கியத்துவத்தைக் குறித்து நீதிமொழிகளின் புத்தகத்திலே அதிகமாய் சொல்லப்படுகிறது.

ஒருமுறை சாதுசுந்தர்சிங் ஒரு மௌன சாமியாரைச் சந்தித்தார். சாதுசுந்தர்சிங் அவரிடத்தில் பேசியபோது, அவர் பதில் ஒன்றும் பேசாமல், "தான் ஆறு வருடங் களாய் யாரிடத்திலும் பேசுவதில்லை" என்று எழுதிக் காண்பித்தார். சாதுசுந்தர்சிங் அவரைப் பார்த்து, "ஐயா, பேசும் திறமை கர்த்தர் கொடுத்த கிருபை அல்லவா? அதை நீங்கள் ஏன் வீணாக்க வேண்டும்? தேவனைத் துதிக்கவும், பாடவும், புகழவும் உங்கள் நாவை பயன்படுத்தக்கூடாதா? நன்மையான காரியங்களைப் பேசி மற்றவர்களை ஆறுதல்படுத்தக்கூடாதா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த மௌன சாமியார் பேப்பரிலே, "என்னால் நன்மையானவைகளைப் பேச இயலவில்லை. தீமைகளை பேசுவதைப் பார்க்கிலும் பேசாமல் இருப்பதே நலம் என்று, இந்த மௌன விரதத்தை மேற்கொண்டேன். ஆனாலும் மன அமைதியையும், சந்தோஷத்தையும் அடைய முடியவில்லை" என்று எழுதினார்.

நாவு மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். அதிலே எலும்புகளில்லை. அது எல்லா பக்கமும் சுழலக்கூடியது. நாவு ஆக்கக் காரியத்திற்கும், அதே நேரத்தில் அழிவு காரியத்திற்கும் பயன்படும். ஒருவனுடைய சிந்தையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவனுடைய நாக்குதான்.

சாதாரணமாக ஒரு காரை திருப்ப வேண்டுமென்றால், ஸ்டீயரிங்கைப் பிடித்து திருப்புகிறார்கள். சைக்கிளை ஹேண்டில்பாரை பிடித்து திருப்புகிறார்கள். கப்பலை சுக்கானைப் பிடித்து திருப்புகிறார்கள். குதிரையைக் கடிவாளத்தைப்போட்டு திருப்புகிறார்கள். ஆனால், மனிதனுடைய வாழ்க்கையை எதினால் திருப்புவது?

அப். யாக்கோபு, "கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவை களாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். அப்படியே, நாவானதும்" (யாக். 3:4,5) என்று எழுதுகிறார். நாவுதான் ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திருப்புகிறது.

கர்த்தர் ஒரு மனுஷனை பரிசுத்த ஆவியினால் நிரப்பும்போது, முதலில் அவனுடைய நாவைத்தான் தொடுகிறார். அப்போது அவனுடைய முழு வாழ்க்கை யையும் திருப்பிவிடலாம் என்பது அவருக்குத் தெரியும். ஏசாயாவை தீர்க்கதரிசியாக கர்த்தர் அபிஷேகம் பண்ணும்போது, முதலாவது பலிபீடத்தின் குறட்டால் அவனுடைய வாயைத் தொட்டார் (ஏசாயா 6:6,7)

அநேகர் தங்கள் நாவினால் தோல்விகளையும், வேதனைகளையும், பயத்தினால் அதைரிய வார்த்தைகளையும், தவிப்பின் வார்த்தைகளையும் பேசிப் பேசி வாழ்க்கையில் சஞ்சலமுள்ளவர்களா விளங்குகிறார்கள். ஆகவே கர்த்தர் அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, நாவை ஆட்கொள்ள சித்தமானார். தேவபிள்ளைகளே, இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, நாவு அந்நிய பாஷைகளைப் பேசுகிறது. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத். 12:34).

நினைவிற்கு:- "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்" (நீதி. 18:21).