தேவ பெலன்!

"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலி. 4:13).

நீங்கள் எதைச் செய்யவேண்டுமானாலும் அதற்கு பெலன் அவசியம் வேண்டும். சரீரத்திலும், ஆத்துமாவிலும், ஆவியிலும் பெலன் வேண்டும். அந்த பெலனைத் தருகிறவர் கர்த்தர்தான். அந்த பெலனைப் பெற்றுக்கொண்ட அப். பவுல், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு"(பிலி. 4:13) என்று சொல்லுகிறார்.

சரீர பெலத்தை அதிகரிக்க பலவிதமான உடற்பயிற்சி செய்பவர்கள், தங்கள் ஆத்துமாவைப் பெலப்படுத்தும் வழிமுறைகளை அவர்கள் அறிவதில்லை. ஏசாயா தீர்க்கதரிசி, கர்த்தரில் சார்ந்துகொண்டு கர்த்தரையே தன் பெலனாக ஏற்றுக் கொண்டார்.

ஏசாயா சொல்லுகிறார், "கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்" (ஏசா. 12:2) ஆபகூக் தீர்க்கதரிசி, "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்" (ஆப. 3:19) என்று சொல்லுகிறார்.

தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து எப்படி பெலனை பெற்றுக் கொள்ளுவது? அது ஜெபத்தினாலும், விசுவாச வார்த்தையினாலுமேயாகும். நீங்கள் ஜெபம் பண்ணப் பண்ண, ஆத்துமாவில் தெய்வீக பெலனைப் பெற்றுக் கொள்ளுவீர்கள். வேத வசனங்களை தியானம் செய்து, அவைகளை விசுவாசத்தோடு அறிக்கை செய்யும்போது, அந்த பெலனிலே உறுதி கொள்ளுவீர்கள்.

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களெல்லாரும் விசுவாசத் தினாலே பெலன் கொண்டார்கள். வேதம் சொல்லுகிறது, "விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங் களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்" (எபி. 11:33,34).

புதிய ஏற்பாட்டு தேவபிள்ளைகளாகிய உங்களுக்கு கர்த்தர் இன்னும் ஒரு மேன்மையான உன்னத பெலனை வாக்களித்திருக்கிறார். உன்னத பெலனால் தரிப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை, இயேசுகிறிஸ்து சீஷர்களிடம் மனம் திறந்து கூறினார். "நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப் படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்" என்றார் (லூக். 24:49).

சீஷர்கள் அந்த உன்னத பெலனைப் பெறுவதற்காக, மேல் வீட்டறையிலே ஒன்று கூடி ஜெபித்துக்கொண்டேயிருந்தார்கள். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, உன்னத பெலன் அவர்கள் மேல் இறங்கியது. அவர்கள் பெலனடைந்தார்கள். பூமியின் கடைசிபரியந்தமும் கர்த்தருக்காக சாட்சியாய் நிற்க பெலனடைந்தார்கள்.

தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் அந்த உன்னத பெலனினால் நிரப்பப் பட்டுக் கொண்டேயிருங்கள். கழுகுகளைப் போல புது பெலனடையுங்கள். தன் சேட்டைகளை அடித்து எழும்பும் கழுகு, மலைகளையோ, குன்றுகளையோ குறித்துக் கவலைப்படாமல், அவைகளுக்கு மேலாக எழும்பிப் பறந்து செல்லும். அப்படியே நீங்களும் எழும்பி, பறந்து, பிரகாசியுங்கள்.

நினைவிற்கு:- "என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்" (சங். 92:10).