தரிக்கப்பட்டது!

"அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்" (உபா. 28:10).

நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள். கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்டவர்கள், கர்த்தருடைய ஜனமாய் விளங்குவது உங்களுக்கு கிடைத்த பாக்கியம்.

பழங்காலத்திலே இரண்டுபேர் ஒருவருக்கொருவர் உடன்படிக்கை செய்து கொண்டு ஒருவருடைய வஸ்திரத்தை மற்றவருக்குக் கொடுப்பார்கள். ஒருவருடைய படைக்கருவிகளை மற்றவர்கள் அணிந்து கொள்ளுவார்கள். இரண்டுபேர் ஒன்றாக உணவு உண்டு உடன்படிக்கை செய்து கொள்ளுவார்கள்.

கர்த்தரும் உங்களோடு உடன்படிக்கை செய்ய விரும்புகிறார். நீங்கள் உங்களுடைய ஆடைகளை கர்த்தருக்கு கொடுக்கிறீர்கள். கர்த்தர் தம்முடைய ஆடைகளை உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் சுய நீதியாகிய அழுக்கான கந்தைகளை கர்த்தருக்குக் கொடுக்கிறீர்கள். அவர் உங்களுக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களையும், நீதியின் சால்வையையும் தரிப்பிக்கிறார்! பரிசுத்தவான்களின் பரிசுத்தமாகிய மெல்லிய வஸ்திரத்தை உங்களுக்குத் தருகிறார்.

ஆதாம் பாவம் செய்தபோது, அவனுக்கு வஸ்திரமில்லாதிருந்தது. தேவ மகிமை அவனைவிட்டு எடுபட்டுப்போயிற்று. அவன் தன்னை நிர்வாணி என்று உணர்ந்தான். ஆனால் எத்தனை அன்பு பாருங்கள்! வேதம் சொல்லுகிறது: "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்" (ஆதி. 3:21). அந்த தோல் உடை, உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியேயாகும். மட்டுமல்ல, கர்த்தருடைய நாமமும் அவர்களுக்குத் தரிக்கப்பட்டது.

ஆடைக்கு ஒரு விசேஷமுண்டு. சீருடைக்கு ஒரு மதிப்புண்டு. ஒரு டாக்டரின் உடையிலிருந்து அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம். காவல்துறையினருக்கென்று, இராணுவத்தினருக்கென்று, விமானப்படையினருக் கென்று தனி உடையிருக்கிறது. நீங்கள் போலீஸ் உடையை உடுத்திக் கொண்டு ரோட்டில் நடக்கும்போது, சூதாடிக்கொண்டிருக்கிறவர்கள், கள்ள சாராயம் காச்சுகிறவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். காரணம் அந்த உடைக்கு என ஒரு தனி மதிப்பு இருக்கிறது.

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்" (2 நாளா. 7:14) என்றும், "கர்த்தரு டைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்" (உபா. 28:10) என்றும் தெரிவித்த கர்த்தர், தம்முடைய நாமத்தையே உங்களுக்கு ஆடையாகத் தரித்திருக்கிறார்.

நீங்கள் பயப்படும்படியல்ல, மற்றவர்களைப் பயப்படுத்தும்படி அழைக்கப்பட்ட வர்கள். நீங்கள் சாத்தானைக் கண்டு பயப்படுகிறவர்களல்ல, சாத்தான் தான் உங்களைக் கண்டு பயப்படுகிறவன். மந்திரவாதிகள் உங்களை மேற்கொள்ளுகிற வர்களல்ல, நீங்கள்தான் மந்திரவாதிகளை சவால் விட்டு மேற்கொள்ளுகிறவர்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை உங்களுக்கு செய்ய கர்த்தர் ஆயத்தமுள்ளவராயிருக்கிறார். கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமும், மகா பெரிய கேடகமுமாயிருக்கிறார்.

நினைவிற்கு:- "ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே" (கலா. 3:27).